

புதுடெல்லி: பங்குச் சந்தையில் பரிவர்த்தனைகள் மேற்கொண்டது தொடர்பான விவரங்களை ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
பங்கு அல்லது பங்குச் சந்தை சார்ந்த இதர முதலீடுகளில் ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளின் ஆறு மாத அடிப்படை ஊதியத்துக்கு அதிகமாக இருந்தால் அதுகுறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அகில இந்திய பணிகள் நடத்தைவிதிகள் 1968 16(4)-ன் கீழ் பகிரப்பட வேண்டிய ஒத்த தகவலுடன் இந்த அறிவிப்பு கூடுதலாக உள்ளது. இந்த விதிகள் இந்திய குடிமைப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வனப் பணி (ஐஎப்எஸ்) என இந்தமூன்று அகில இந்திய சேவை உறுப்பினர்களுக்குப் பொருந்தும். அகில இந்திய பணி (ஏஐஎஸ்) நடத்தை விதிகளின்படி, பங்கு, பத்திரங்கள், கடன்பத்திரங்கள் ஆகியவை அசையும் சொத்துகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.