Published : 31 Mar 2023 08:01 AM
Last Updated : 31 Mar 2023 08:01 AM

நிறுவனங்களின் வரவு - செலவு மென்பொருளில் ‘ஆடிட் டிரையல்’ வசதி நாளை முதல் கட்டாயம்

கோப்புப்படம்

புதுடெல்லி: நிறுவனங்கள் நாளை முதல் தங்கள் நிறுவனத்தின் வரவு, செலவுகணக்குகளை நிர்வகிக்கப் பயன்படுத்தும் மென்பொருளில் ஆடிட் டிரையல் எனப்படும் தணிக்கை சோதனை வசதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய நிறுவன விவகார அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

நிறுவனங்கள் தங்கள் மென்பொருளில் ஆடிட் டிரையல் வசதியை கொண்டிருக்கும்படி 2021 மார்ச் மாதத்தில் மத்திய நிறுவன விவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. 2022 ஏப்ரலில் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் அனைத்து நிறுவனங்களும் ஆடிட் டிரையல் வசதியைக் கொண்டிருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

ஆடிட் டிரையல் என்பது என்ன?

நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கென்று மென்பொருளைப் பயன்படுத்துவது வழக்கம். வரவு, செலவு உட்பட நிறுவனத்தின் அனைத்து நிதிசெயல்பாடுகளும் இந்த மென்பொருள் மூலம் நிர்வகிக்கப்படும். இந்த நிதிச் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க ஆடிட் டிரையல் உதவும்.

நிறுவனத்தின் வரவு, செலவு பதிவேட்டு மென்பொருளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அனைத்தும் ஆடிட் டிரையல் வசதியின் கீழ் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். எப்போது ஒரு தகவல்பதியப்பட்டது, யார் அந்தத் தகவலை பதிந்தார், அந்தத் தகவல்திருத்தப்பட்டால் எப்போது திருத்தப்பட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆடிட் டிரையல் வசதி மூலம் கண்டறிய முடியும்.

ஏன் இந்த வசதி?

நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆரம்பநிலையிலேயே தடுக்கவும், நிறுவனங்களின் நிதி செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் மத்திய அரசு ஆடிட் டிரையல் வசதியை கட்டாயமாக்கியுள்ளது.

நிறுவனங்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை இந்த வசதி உறுதிப்படுத்தும்.

ஒரு நிறுவனத்தின் மீது மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது வருமான வரித் துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் அந்த நிறுவனத்தின் ஆடிட் டிரையல் வசதியை பார்வையிட்டு, மோசடி தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியும்.

நிறுவனங்கள் இந்த ஆடிட் டிரையல் வசதியை தங்கள் மென்பொருளில் செயலிழக்கச் செய்ய முடியாது.

ஆடிட் டிரையல் வசதி குறித்து நிபுணர்கள் கூறுகையில், “இனி நிறுவனங்கள் தாங்கள் மேற்கொள்ளும் பதிவுகளில் அலட்சியமாக இருக்க முடியாது. மோசடிகள் மேற்கொண்டால் அது எளிதில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்” என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x