கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி

Published on

கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம். உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் கோவையிலிருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் ‘பாண்டட் டிரக்’ சேவை மூலம் சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. ஸ்கேனிங் ஆபரேட்டர் நியமிக்கப்படாததால் கடந்த 2 மாதங்களாக உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து தொடர்ந்து நடக்கிறது.

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்ப்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்.

சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.

கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியிலிருந்து மாம்பழங்கள் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிஉள்ளது. சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும் என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in