அதிக வரி, ஸ்பெக்ட்ரம் கட்டணங்களால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பாதிப்பு: ஏர்டெல், ஐடியா நிறுவன சிஇஓ-க்கள் குற்றச்சாட்டு

அதிக வரி, ஸ்பெக்ட்ரம் கட்டணங்களால்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பாதிப்பு: ஏர்டெல், ஐடியா நிறுவன சிஇஓ-க்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தொலைத் தொடர்புத் துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமே ஸ்பெக்ட்ரம் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்படுவதும், அதிக வரி விதிப்பும்தான் என ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

வங்கிகளின் வாராக் கடன் சுமை அதிகரிப்பில் தொலைத் தொடர்புத்துறைக்கு சேவை அளிக்கும் நிறுவனங்களும் உள்ளன. கடுமையான நிதி நெருக்கடியில் இத்துறை சிக்கித் தவிக்கிறது. அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம் ) விலை நிர்ணயம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிக அளவிலான வரி விதிப்பும், தொலைத் தொடர்புத் துறை கட்டுப்பாடுகளும் இத்துறையை நலிவடையச் செய்துவிடுவதாக இவ்விரு நிறுவன பிரதிநிதிகளும் டெல்லியில் தொடங்கிய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் குற்றம் சாட்டினர்.

தொலைத் தொடர்புத் துறைக்கு 29 சதவீதம் முதல் 32 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகம். வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் அலைக்கற்றை லைசென்ஸ் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இது மிகவும் முரண்பாடான விஷயம். இந்த நிலை மாற வேண்டும். டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை எட்ட இதுபோன்ற சுமைகள் உதவாது என்று பார்தி ஏர்டெல் தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்ட முதலீடுகளை விட கடந்த இரண்டு ஆண்டில் செய்யப்பட்ட முதலீடு மிக அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார். இத்துறையில் கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை செயலாக்கம் பெற கால தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடு மிகவும் மந்தமாகவே உள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஆனால் தொழில் நிறுவனங்களால் தொழிலை நடத்த முடியாமல் பல்வேறு பிரச்சினைகள் வெவ்வேறு தளத்திலிருந்து புதிது புதிதாக ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன என்றார் கோபால் விட்டல்.

சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் மற்றும் கடன் சுமை குறித்த விவரங்கள் தொலைத் தொடர்புத் துறை எந்த அளவுக்குப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்பதை விளக்கப் போதுமானதாக உள்ளன என்று ஐடியா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஹிமன்ஷு கபானியா தெரிவித்தார்.

தொலைத் தொடர்புத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினை எப்படி உள்ளது என்றால் ஒரு பெரிய யானையை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு அதைப் பற்றி எவருமே பேசாமலிருப்பதைப் போல் உள்ளது என்று கபானியா குறிப்பிட்டார். ஸ்பெக்ட்ரம் கட்டணம், வரி மற்றும் இப்போது கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி ஆகியன மிகப் பெரும் முட்டுக்கட்டைகளாக விளங்குகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in