64 சட்ட திருத்தங்களைக் கொண்ட நிதி மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: வரும் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது அவர் நிதிச் சட்டங்களில் 64 திருத்தங்களைக் கொண்ட ‘நிதி மசோதா 2023’ அறிமுகம் செய்தார். கடன் பரஸ்பர நிதித் திட்டங்கள் குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும் என்றும் அதற்கான வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது போன்று 64 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த நிதி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பரஸ்பர நிதித் திட்டங்களின்கீழ், நிறுவனப் பங்குகளில் 35 சதவீதத்துக்குக் கீழாக முதலீடு செய்யப்பட்டிருக்கும் கடன் நிதி திட்டங்களுக்கான வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ராயல்டி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வசூலிக்கும் தொழில்நுட்ப கட்டணங்கள் மீதான வரி 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடன் பத்திர பரிவர்த்தனை வரி 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பாக்கித் தொகையை உரியகால அளவுக்கு செலுத்தாவிட்டால் வரி விலக்கு கோர முடியாது என்றும் நிதி மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி மசோதாவில் சட்டத் திருத்தங்களுடன் புதிதாக 20 சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களின் பென்சன் தொடர்பாக நிதித் துறை செயலகத்தின் கீழ் குழு அமைக்கப்படும் என்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்பும் நடைமுறையில் ஆரம்ப நிலையிலேயே வரிப் பிடித்தம் செய்தவதற்கான வாய்ப்புகளை ரிசர்வ் வங்கி ஆராயும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த மசோதாவை நிறைவேற்றும் சமயத்தில், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in