Published : 22 Mar 2023 10:30 PM
Last Updated : 22 Mar 2023 10:30 PM

விருதுநகரில் ஜவுளிப் பூங்காவுக்கான ஒப்பந்தம் கையெழுத்து | 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - மத்திய அரசு

பிரதமர் மித்ரா திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

விருதுநகர்: "தமிழகம் ஏற்கெனவே ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்ற அடிப்படையில், இந்த பிரதமர் மித்ரா ஜவுளிப்பூங்கா விருதுநகரில் அமைக்கப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த பூங்கா மூலமாக தமிழ்நாட்டின் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

ஜவுளித்துறையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையை ஈர்க்கவும் பிரதமர் மித்ரா ஜவுளிப் பூங்காக்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டின் விருதுநகரில் அமைக்கப்பட உள்ள ஜவுளிப் பூங்காவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது: "உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார சூழல் கடினமான ஒரு நிலையை எட்டியிருந்தபோதிலும், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மந்தமான சூழல் நிலவியபோதிலும், இந்தியா நம்பிக்கைக்குரிய ஒரு நாடாக திகழ்கிறது. வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரமாக இந்தியா நிலைப்பெற்றிருக்கிறது. சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணக்கூடிய ஒரு மையமாக இந்தியா திகழ்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக அரங்கில் மிகவும் புகழ்பெற்ற பிரதமராக திகழ்கிறார். அவரது திட்டங்களும், தொலைநோக்குப் பார்வையும் மாநிலங்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவது மூலமாக, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல இயலும் என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆழ்மன விருப்பமும், உறுதிபாடும் பிரதமர் நரேந்திர மோடியிடம் நிறைந்திருக்கிறது.

விடுதலையின் அமிர்த பெருவிழா நிறைவடைந்து, அமிர்தகாலத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தியா, பல்வேறு சாதனைகளை புரிந்து வலுபெற்ற நாடாக விரைவில் உருவெடுக்கும். தமிழ்நாட்டில் இன்று இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விருதுநகரில் ஜவுளிப்பூங்காவை அமைப்பதற்கு தேவையான அனைத்து சூழலியல் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தமைக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமருக்கு தனிப்பட்ட முறையிலான அக்கறை இருப்பதாகவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து அவர் அறிவித்து வருவதாகவும் கூறிய அமைச்சர் பியூஷ் கோயல், இதற்கு தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரம், பாரம்பரிய இசை மற்றும் இலக்கியம் காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு பெரும் பங்காற்ற முடியும் என்று அமைச்சர் அப்போது கூறினார்.

தமிழகம் ஏற்கெனவே ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்ற அடிப்படையில், இந்த பிரதமர் மித்ரா ஜவுளிப்பூங்கா விருதுநகரில் அமைக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் ஜவுளித்துறையில் மதிப்புக் கூட்டுப்பொருட்கள் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த பூங்கா அமைவதன் மூலம் ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் அமையவிருக்கிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த பூங்கா மூலமாக தமிழ்நாட்டின் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இன்றைய நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் பேசியது: "பிரதமர் நரேந்திர மோடி தலைமை பொறுப்பிற்கு வந்தபிறகு, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை அதிகளவில் வழங்கி வருகிறார். சாகர் மாலா திட்டம், போக்குவரத்து திட்டம், பாதுகாப்பு, தளவாடங்கள் உற்பத்தி வழித்தடம் அமைப்பதில், பிரதமர் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை அளித்து வருகிறார்.

நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறையில் தமிழ்நாட்டிற்காக 6088 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு- சென்னை, மதுரை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜவுளித்துறை மற்றும் ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மா சுப்பிரமணியன், ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x