

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிய மெகுல் சோக்ஸிக்கு எதிரான ரெட் நோட்டீஸ் உத்தரவை மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ மேலும் கூறியுள்ளதாவது: சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு மெகுல்சோக்ஸிக்கு எதிராக இண்டர்போல் ரெட் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டது.
கட்டுப்பாட்டில் இல்லை: இதனை எதிர்த்து சோக்ஸி செய்த மேல்முறையீடுகள் 2020-ல் நிராகரிக்கப்பட்டன. அதன் பிறகு, 2022-ம் ஆண்டில் சிசிஎப்-ஐ அணுகினார். இந்த அமைப்பு இண்டர்போலில் தனியான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இது, இண்டர்போலின் கட்டுப்பாட்டிலும் இல்லை.
இந்த நிலையில், வெறும் கற்பனையான, நிரூபிக்கப்படாத ஊகங்களின் அடிப்படையில் ஐந்து உறுப்பினர்களை மட்டும் கொண்ட சிசிஎப் ரெட் நோட்டீஸை நீக்குவது குறித்து முடிவு எடுத்துள்ளது.
சோக்ஸி மீது இந்திய அரசு நிதி மோசடி குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் அதுகுறித்து தாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று சிபிஐ-க்குசிசிஎப் ஏற்கெனவே தெளிவுபடுத்தி யுள்ளது.
எனவே, இந்த தவறான முடிவைத் திருத்துவதற்கும், சிவப்பு அறிவிப்பை மீட்டெடுப்பதற்கும் இண்டர்போலிடம் தேவையான மேல்முறையீட்டு வழிமுறைகளில் சிபிஐ தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு சிபிஐ தெரிவித்துள்ளது.