Published : 21 Mar 2023 05:38 AM
Last Updated : 21 Mar 2023 05:38 AM
சென்னை: சென்னையில் 2024 ஜன.10, 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 மே மாதம் முதல் இதுவரை 3.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் ரூ.2.70 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும். இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2024 ஜன.10, 11-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. தொழில்கள் செழிக்கும் தமிழகத்தின் தனிச் சிறப்புகளையும், முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இந்த மாநாடு அமையும்.
மேலும், மாநிலத்தில் உள்ள பெருந்தொழில்கள், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்களுடனும், உலகச் சந்தையுடனும் இணைக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமையும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பது அரசின் குறிக்கோள். சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் ரூ.1.44 லட்சம் கோடி முதலீட்டில் 2.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அரசு பொறுப்பேற்றதில் இருந்து திட்டமிட்ட தொழில் வளர்ச்சியை அடைவதற்காக, துறை சார்ந்த நிதி நுட்பக் கொள்கை, ஆராய்ச்சி - வளர்ச்சி கொள்கை, உயிரியல் கொள்கை, ஏற்றுமதி கொள்கை, வான்வெளி - பாதுகாப்பு கொள்கை, காலணி - தோல் கொள்கை, மின்சார வாகனங்கள் கொள்கை, தளவாடக் கொள்கை, நகர எரிவாயு வழங்கல் கொள்கை, எத்தனால் கொள்கை என 10 புதிய கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனையான இருசக்கர மின் வாகனங்களில் 46 சதவீத வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT