

புதுடெல்லி: அமெரிக்காவின் மிகப் பெரியவங்கிகளில் ஒன்றான, எஸ்விபி நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தன. தற்போது இந்த வங்கிமூடப்பட்டுள்ளதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் கடும் நெருக் கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
இந்நிலையில் எஸ்விபி வங்கியில் பணம் போட்டிருந்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, நெருக்கடியை சமாளிக்க உள்நாட்டு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
“இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எஸ்விபி வங்கியில் 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) அளவில் வைப்புத் தொகை கொண்டுள்ளன. இந்நிலையில் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க உள்நாட்டு வங்கிகளிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க வங்கிகளின் நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, இந்திய வங்கிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தியுள்ளார். “இந்திய வங்கிகள் அதன் சொத்து மற்றும் கடன் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது அதன் சாதக, பாதகங்களை தீவிரமாக ஆராய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.