

மும்பை: பணமோசடி வழக்கில் சென்னை மற்றும் மும்பையில் பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய உயர் அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
பிராங்க்ளின் டெம்பிள்டன் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிதி சேவை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவிலும் நிதி சேவை வழங்கி வருகிறது. கடந்த2020 ஏப்ரல் மாதம் இந்நிறுவனம் இந்தியாவில் அதன் 6 கடன் திட்டங்களை மூடியது. கரோனா சூழல்காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அந்தத் திட்டங்களை மூடுவதாக அறிவித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.25,000 கோடி முதலீடாக பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வாடிக்கையாளரிடம் பெற்ற தொகையை உடனே திருப்பி வழங்க வேண்டும் என்று கூறி அந்நிறுவனம் மீது ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறை அந்நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், மும்பை மற்றும் சென்னையில் அந்நிறுவனத்தின்முன்னாள், தற்போதைய உயர் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
இந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவராக இருந்தவிவேக் குட்வா மற்றும் அவரது மனைவி ரூபா குட்வாவுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பிராங்க்ளின் டெம்பிள்டன் அதன் கடன் திட்டங்களை மூடுவதற்கு முன்பாக, இவ்விருவரும் தாங்கள் அந்தத் திட்டத்தில் முதலீடு செய்திருந்த பணத்தை முன்னெச்சரிக்கையாக திரும்பப் பெற்றது முந்தைய விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.