

புதுடெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களின் (புரோமோட்டர்கள்) பங்குகளை தேசிய மற்றும் மும்பைப் பங்குச் சந்தை முடக்கியுள்ளது. இதனால், பங்குச் சந்தையில் அதன் மதிப்பு சரிந்துள்ளது.
பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் அதன் முதன்மை முதலீட்டாளர்கள் வசம் 80.82 சதவீதம் உள்ளது. பொது முதலீட்டாளர்கள் (மக்கள்) வசம் 19.18 சதவீதம் பங்கு மட்டுமே உள்ளது. செபி விதிப்படி, நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களிடம் 75 சதவீதமும், பொது முதலீட்டாளர்களிடம் 25 சதவீதமும் பங்கு இருக்க வேண்டும். இதைக் கடைபிடிக்கத் தவறியதால் பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களின் பங்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக பதஞ்சலி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. அதில் “ருச்சி சோயா நிறுவனம் திவாலான நிலையில் அந்நிறுவனத்தை 2019-ம் ஆண்டு பதஞ்சலி குழுமம் வாங்கியது. பின்னர் அது பதஞ்சலி புட்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. செபியின் விதிப்படி பொது முதலீட்டாளர்கள் வசம் 25 சதவீதம் பங்குகள் இருக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தைப் புதிதாகக் கையகப்படுத்தும்போது, பொது முதலீட்டாளர்களின் வசமுள்ள பங்குகள் குறைந்தால், மூன்று ஆண்டுகளுக்குள் அதை 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். பதஞ்சலி குழுமம் அதற்கான முயற்சியில் இறங்கிய சமயத்தில்தான் கரோனா பேரிடர் வந்தது. இதனால், பொது முதலீட்டாளர்களின் பங்கை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், பொது முதலீட்டாளர்களின் பங்குகளை அதிகரிக்கத் தவறியதால் பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டாளர்களின் பங்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால், பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. நிதி நிலையும் நெருக்கடியைச் சந்திக்காது. விரைவிலே, பொது முதலீட்டாளர்களின் பங்கு அதிகரிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.