

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 344 புள்ளிகள் (0.59 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,555 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் (0.42 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 16,972 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் நான்கு நாட்கள் நிலவி வந்த இறங்குமுகம் மாறி புதன்கிழமை வர்த்தகம், ஏற்றத்துடன் தொடங்தியது. காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 402.83 புள்ளிகள் உயர்வடைந்து 58,303.02 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 104.90 புள்ளிகள் உயர்வடைந்து 17,148.20 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாதகமான போக்குகளால் இந்திய பங்குச்சந்தைகள் முதல் பாதி வர்த்தகத்தை லாபத்துடன் தொடங்கின. பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெவிவெயிட் பங்குகளின் விற்பனை அழுத்தத்தால், பிற்பாதி வர்த்தகத்தில் வீழ்ச்சியடையத் தொடங்கின. அமெரிக்காவின் இரண்டு வங்கிகளின் வீழ்ச்சி இந்திய சந்தைகளைப் பாதிக்காது என்று கூறப்பட்டிருந்தாலும் நிதி மற்றும் வங்கிப்பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் அச்சம் இன்னும் தீரவில்லை. அதனால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன.
காலை வர்த்தகத்தில் 58,474 ஆக உயர்ந்திருந்த சென்செக்ஸ், பிற்பாதியில் 1,018 புள்ளிகள் சரிந்து 57,456 ஆக இறங்கியது. கடந்த ஐந்துநாள் வர்த்தக வீழ்ச்சியில் சென்செக்ஸ் 2,792 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது. நிஃப்டியும் பிற்பாதி வர்த்தகத்தில் 16,939 வரை இறங்கியது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 344.29 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,555.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71.10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,972.20 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தது. எம் அண்ட் எம், ஐடிசி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, டாடா மோடார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.