

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 337 புள்ளிகள் (0.58 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,900 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 111 புள்ளிகள் (0.65 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,043 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார இரண்டாம் நாள் வர்த்தகம் தட்டையாகத் தொடங்கி ஏற்ற இறக்கத்தில் பயணித்தது. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 46.14 புள்ளிகள் உயர்வடைந்து 58,283.99 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,188.80 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் பலவீனமான போக்கு, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோ, எரிசக்தி, ரியாலிட்டி பங்குகளின் விற்பனை அழுத்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியில் நிறைவடைந்தன. கடந்த 2022ம் ஆண்டு அக்.13-ம் தேதிக்கு பின்னர் முதல் முறையாக நிஃப்டி 17,000க்கும் கீழே சென்றுள்ளது. நாளின் அதிகபட்சமாக.16,987 வரை சென்றது. சென்செக்ஸ் அதிக பட்சமாக 57,721 வரை சென்றது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 337.66 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,900.19 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 111.00 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,043.30 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி பங்குகள் உயர்வடைந்திருந்தது. நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்,ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.