

மும்பை: அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான, சிலிகான் வேலி பேங்க் (எஸ்விபி) வைப்புத் தொகை இருப்பு குறைந்த நிலையில் திவாலாகி உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில் மும்பையைச் சேர்ந்த எஸ்விசி வங்கி ஒரு வித்தியாசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் எஸ்விபி மற்றும் இந்தியாவின் எஸ்விசி இருவங்கிகளின் பெயரும் ஒன்றுபோல் தோன்றுவதால் பெயர் குழப்பம் ஏற்பட்டு, எஸ்விசி வங்கி திவாலாகி விட்டதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.
இதனால், எஸ்விசி வங்கியில் வைப்புத் தொகை வைத்திருந்தவர்கள் அச்சமடைந்து தங்கள் பணத்தை திரும்ப எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் எஸ்விசி வங்கி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “எஸ்விசி நூற்றாண்டு பாரம்பரியமிக்க வங்கி. இந்தியாவில் மட்டுமே அது செயல்படுகிறது.
தற்போது திவாலாகி இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்விபி வங்கி. அந்த வங்கிக்கும் எஸ்விசி வங்கிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மக்களும் வாடிக்கையாளர்களும் எஸ்விசி வங்கி குறித்து வரும் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.