

தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு புதிய அதிகாரியாக (சிஏஜி) ராஜிவ் மெஹ்ரிஷி நாளை (திங்கள்கிழமை) பொறுப்பேற்றுக் கொள்வார் என டெல்லி அதிகாரிகள் வட்டம் தெரிவிக்கின்றது.
அவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து நாளை அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படுகிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
சிஏஐ தலைவராக உள்ள சசிகாந்த் சர்மாவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து ராஜிவ் மெஹ்ரிஷி சிஏஜியாக பொறுப்பேற்கிறார்.
மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் இறுதியில் 1978 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் மெஹ்ரிஷியை தலைமைத் தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமித்தது. சிஏஐ அதிகாரி நியமனத்தில் மத்திய அரசு வெளிப்படையாக செயல்படவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மெஹ்ரிஷிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் எனக் கூறப்படுகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 1978 பேட்ச் அதிகாரியான மெஹ்ரிஷி, மத்திய உள்துறை செயலராகவும் பதவி வகித்துள்ளார். இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களையும் இங்கிலாந்தில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றவர். ராஜஸ்தான் மாநிலத் தலைமை செயலராகவும், பொருளாதார விவகாரத் துறை செயலராகவும், ரசாயனம் மற்றும் உரத்துறை செயலராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.