Last Updated : 01 Sep, 2017 10:35 AM

 

Published : 01 Sep 2017 10:35 AM
Last Updated : 01 Sep 2017 10:35 AM

சிறிய தரவுகள்: எதிர்வரும் பெரிய நிகழ்வு

ன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய மாற்றங்களோடு கூடிய புதிய நடைமுறை எது என்ற கேள்விக்கு கைபேசி, சமூக வலைதளங்கள் என்று வரிசைப் படுத்திக்கொண்டே வந்து பெரிய தரவுகள் என்று கடைசியாக கூறலாம். ஆனால், லிண்ட்ஸ்ட்ரோம் (LINDSTROM) என்ற நூல் ஆசிரியர் வித்தியாசமான ஒரு பதிலை குறிப்பிடுகிறார். அதுதான் சிறிய தரவுகள். இன்றைய காலகட்டத்தில் உலகமே வியந்து மிகப்பெரிய தரவுகளை தாங்கிக் கொண்டு அதன் மூலம் விடைகளை தேடிகொண்டு வியாபாரத்தை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் லிண்ட்ஸ்ட்ரோம் என்பவரோ மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்வதற்கு மிகச்சிறிய தரவுகள் மிக அவசியம் என்று கூறுகிறார்.

மிகப்பெரிய தரவுகள் எண்களாலும், இயந்திரங்களாலும் ஆனவை. மிகச்சிறிய தரவுகளோ மனிதர்களாலோ, எண்ணங்களாலோ ஆனவை. செம்மறி ஆட்டு கூட்டம்போல் ஒரே பாணியில் சென்றுகொண்டிருக்கும் ஆய்வாளர்களுக்கு நடுவே நூல் ஆசிரியர் வித்தியாசமாக தெரிகிறார். நிஜ மனிதர்களிடம் உண்மையான சூழ்நிலைகளில் பெறப்படும் மிகச்சிறிய தரவுகள் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என மனதார நம்புகிறார். மிகப்பெரிய தரவுகளுக்கு எதிராக மனிதநேயம் மிக்க சிறிய தரவுகள் வணிகத்தை புரட்டிப்போடும் தன்மை கொண்டது. உள்ளுணர்வுகளை உந்தித் தள்ளி சிறிய குழுக்களை கூர்ந்து நோக்கும் பொழுது எண்களும் மிகப்பெரிய கணக்குகளும் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. 323 மில்லியன் டாலர் வருமானம் உள்ள 24 நாடுகளில் இருக்கின்ற இந்த ஆயத்த ஆடை நிறுவனம் சிறிய தரவுகளை வைத்து எப்படி பெரிய நிகழ்வுகளை ஏற்படுத்தின என்பதை பற்றி இனி காண்போம்.

2002-ம் ஆண்டில் விற்பனை கீழே இறங்கியது. நிறுவனம் பிரச்சனைகளை எதிர்கொண்டு இருந்தது. வடிவமைக்கப்பட்டவைகளை எளிதில் புரிந்துகொள்ளவும் அவைகளை மீண்டும் வடிவமைக்கவும் யாரும் தயாரில்லை. ஏனென்றால், அந்த அச்சுக்களையும், கட்டங்களையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை. சிறிய சிறிய கட்டங்களையும், அச்சுகளையும் சேர்த்து பெரிய வடிவங்களை வடிவமைப்பது கடினமான செயல் என்ற காரணத்தினால் வடிவமைப்பு குழுவினர் உற்பத்தி திறனில் மிகவும் பின் தங்கி இருந்தனர்.

லிகோ (LEGO)என்ற வியாபாரக் குறியீடு எந்த அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து இருக்கிறது என்று சோதித்துப்பார்க்க ஜெர்மனியில் உள்ள சிறுவர்களையும், சிறுமிகளையும் நேரில் சென்று பேசி அவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்தார்கள். அப்போது, பதினொரு வயது சிறுவன் தேய்ந்து போன காலணியை மேசையின் மேலே வைத்து அதை பெரிதாக பேசிக்கொண்டிருந்தான். அது போன்ற தேய்ந்த காலணிகளை மிகவும் விரும்புவதாக கூறினான். ஏனென்றால் சறுக்கு விளையாட்டில் காலணிகள் நேராக சம தளத்தில் இருந்தால் வேகம் கூடாது.

12½ டிகிரி அளவில் வளைந்து இருந்தால் உராய்வுகளின் காரணமாக வழுக்கி செல்லும் பொழுது வேகம் கூடும். விளையாட்டில் முதலாவதாக இருப்பதற்கு இந்த வேகமும் இந்த வளைந்த தேய்ந்த காலணியே காரணம் என்று கூறிய காரணத்தினால் புதிதாக வடிவமைக்கும் காலணிகளை வளைத்து, குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்தார்கள். இந்த செயலை உள்வாங்கி உத்திகள் ஏற்படுத்தி லிகோ என்ற பன்னாட்டு வாணிப குறியீடு குழந்தைகளின் பொம்மைகளையும், காலணிகளையும் உற்பத்தி செய்வதற்கு இது போன்ற குழந்தைகளின் நேரடியான உணர்வு பூர்வமான எண்ணங்களின் பகிர்தல் காரணமாக அமைந்தன. இது மிகச் சிறிய தரவு ஆகும்.

குளிர்சாதன பெட்டிகளில் காந்தங்களை பொருத்துவதை பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாசாரம் இந்த காந்தங்களை குளிர்சாதன பெட்டிகளில் பொருத்துவதில் பின்பற்றுவதை கண்கூடாக கண்ட பின் அதற்கு தகுந்தாற் போல் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நூலாசிரியர் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும் பொழுது மிக நுண்ணிய அளவில் குறைந்த தரவுகளையும் கவனமாக பதிந்து பின் அவைகளை வியாபார உத்திகளாக மாற்றிய நிகழ்வுகள் ஏராளம். சவுதி அரேபியாவில் குளிர்சாதன பெட்டியில் ஒட்டவைக்கும் காந்தங்களை உயரத்தில் ஒட்டி இருந்தார்கள். இந்த குளிர்சாதன பெட்டிகளில் ஒட்டக்கூடிய காந்தங்கள் படங்களாகவும், நினைவுகளாகவும், உணர்வுகளாகவும், மெய்பாடுகளாகவும் காணப்பட்டன. ஒரு சூழ்நிலையினாலோ அல்லது ஏதேனும் ஒரு நாட்டிற்கு சென்று வந்ததினாலோ அதன் நினைவாக குளிர்சாதன பெட்டியில் ஏதேனும் ஒன்றை பதிய விடுவது வாடிக்கையான செயல்.

ஆனால், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்திற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். அதே சமயம் சைபீரியாவில் காந்தப்படங்களை குளிர்சாதன பெட்டியில் உயரம் குறைவான இடங்களில் ஒட்டியிருந்தார்கள். குழந்தைகள் அவற்றை எடுத்து தாராளமாக விளையாடி மறுபடியும் ஒட்ட வைத்துக்கொண்டிருந்தார்கள். இதை உற்று நோக்கும் பொழுது நினைவுப் பரிசாகவோ, பெருமை வாய்ந்த பொருளாகவோ அரேபிய நாட்டில் மதித்து குளிர்சாதனப் பொட்டியில் ஒட்ட வைத்து இருந்தனர். ஆனால் சைபீரியாவில் ஒரு விளையாட்டு சாதனமாக குழந்தைகள் எடுத்து விளையாடி மறுபடியும் வைக்கும் போது விளையாட்டு பொம்மையாக கண்டார்கள்.

இந்த வினாடி நேர உத்வேகம் ரஷ்யன் பொம்மை என்ற நிறுவனத்தை தோற்றுவிப்பதற்கு அடித்தளமாக இருந்தது. நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது சலிப்பு தோன்றாது. வெறுப்பு தோன்றாது. நிகழ்வுகளோடு நம்மை இணைத்து பார்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு இணைத்துப் பார்க்கும் பொழுது மிகச்சிறிய தரவுகளும், மிகச்சிறிய நிகழ்வுகளும் ரஷ்யன் பொம்மை நிறுவனம் போன்று புத்தாக்கத்திற்கு வழிவகுக்கும், வழிக்காட்டும்.

அலைபேசிகள் அலை அலையாக வந்து போதை போன்ற பழக்கத்தை உண்டாக்கும். அது போன்ற நேரத்தில் தெளிவான முறையில் சிறிய தரவுகளை பிரித்துப் பார்ப்பது கடினம். ஆனால் அவைகளை தூக்கி எறிய முடியாது.

அவைகளை குறைத்துக்கொண்டு மனித நேயத்தோடும் உள்ளுணர்வுகளோடும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் அணுகினால் எழக்கூடிய சிறிய தீப்பொறிதான் சிறிய தரவுகள். வெறும் தரவுகள் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்காது புதுமைகளை புகுத்தாது. மாறாக, உள்ளுணர்வுகளும், மனித நேய இணைப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக வரும் பொழுது புதுமை வந்து சேரும். அது தான் சிறிய தரவுகளின் அடிப்படை.

 தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x