

இனி விமானப் பயணத்தின்போது செல்போன் மற்றும் லேப்டாப்களைப் பயன்படுத்தலாம். இதற்கு சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவைகளை `பிளைட் மோட்’ எனப்படும் பிரிவில் வைத்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக விமான பயணத்தின் போது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. இது விமானத்துக்கு வரும் சிக்னல்களுக்கு இடையூறாக இருக்கக்கூடும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க ஃபெடரல் விமான அமைச்சகம் மற்றும் ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு ஆகியன சில நடைமுறைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
இதன்படி சிக்னல்களை வெளியிடாத வகையில் லேப்டாப் மற்றும் செல்போன்களை பிளைட் மோடில் வைத்து பயன்படுத்த அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணத்தின்போது செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு பயணிகளிடமிருந்து கோரிக்கை வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானப் பயணத்தின்போது சிக்னல்களை வெளியிடாத வகையில் வீடியோ கேம் விளையாடுவது, பிடித்த இசயைக் கேட்டு ரசிப்பது, வீடியோ காட்சிகளை பார்த்து ரசிப்பது, மின் அஞ்சல்களுக்கு பதில் தயார் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும்.
இத்தகைய அறிவிப்புக்கு பல்வேறு விமான நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவை கூறியுள்ளன. விமானப் பயணத்தின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது எனக் கூறுவது மிகவும் பிற்போக்குத் தனமானது. சர்வதேச அளவில் சமீபத்தில் இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க பெடரல் விமான அமைச்சகம் விமானங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதித்தது. இதேபோல சிக்னல்களை வெளியிடாத வகையில் பயன்படுத்த அனுமதித்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த டிசம்பரில் அனுமதி அளித்தது.
சில விமான நிறுவனங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் 2008-ம் ஆண்டிலிருந்தே அனுமதித்துள்ளன. எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது பயணிகளுக்காக செல்போன் தொடர்பு வசதியை விமானங்களில் ஏற்படுத்தித் தந்தது. 2009-ம் ஆண்டில் ஐரோப்பாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ரினெய்ர் நிறுவனம் இதே போன்ற சேவையை அளித்தது.
இப்போதைக்கு விமானங்களில் பிளைட் மோடில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வை-ஃபை மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விமானங்களில் இத்தகைய வைஃபை சேவையை ஏரோ மொபைல் மற்றும் ஆன்ஏர் நிறுவனங்கள் அளிக்கின்றன. இருப்பினும் இந்திய வான் பரப்பில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.