

கோவில்பட்டி: விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளை விக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.
விளாத்திகுளம், புதூர் பகுதிகள் தவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியிலும் முண்டு வத்தல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது முண்டு மற்றும் சம்பா வத்தல் குவிண்டால் ரூ.18 ஆயிரத்துக்கு விலை போகிறது. கடந்த ஆண்டு முண்டு வத்தல் குவிண்டால் ரூ.32 ஆயிரம் வரை விற்பனையானது. இந்தாண்டு போதிய மழையின்றி மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டன.
விளாத்திகுளம் வட்டத்தில் அதிகமாக விளையும் முண்டு வத்தலுக்கு விவசாயிகள் புவிசார் குறியீடு கேட்டனர். இதே கோரிக்கையை ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளும் வைத்திருந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் விளையக்கூடிய முண்டு வத்தலுக்கு கடந்த வாரம் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
இதனால் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “ ராமநாதபுரம் மாவட்ட முண்டு வத்தலுக்கு மட்டும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். புவிசார் குறியீடு கிடைத்தால் விற்பனை விலை அதிகரிக்கும்.
சர்வதேச அளவில் மதிப்பு கிடைக்கும். விளாத்திகுளம், புதூர் வட்டார பகுதியில் விளைவிக்கப்படும் முண்டு வத்தலுக்கும் புவிசார் குறியீடு கிடைக்க கனிமொழி எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.