

மும்பை: கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்தியப் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் சென்செக்ஸ் 1.53%, நிஃப்டி 1.57% ஏற்றம் கண்டன.
நேற்றைய வர்த்தக முடிவில் 899 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 59,808 ஆக நிலைபெற்றது. 272 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி குறியீடு 17,594 ஆக நிலைபெற்றது.
அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் 16.94% வளர்ச்சி கண்டது. அதானி போர்ட்ஸ் 9.91%, எஸ்பிஐ 5.14%, பார்தி ஏர்டெல் 3.28% ஏற்றம் கண்டன. அதேசமயம் டெக் மஹிந்திரா -2.22%, அல்ட்ராடெக்சிமெண்ட் -1.00% சரிவு கண்டன.
அமெரிக்க மத்திய வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவு ஆகும். இதன் காரணமாக அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்று வலுவடைந்துள்ளது. இதுவும் பங்குச் சந்தை ஏற்றத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.