

தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில் பயிர் செய்யப்படும் மக்காச்சோளம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு என்ன விலை கிடைக்கும் என்பது குறித்து திருச்சியில் உள்ள வேளாண் விற்பனை தகவல் மற்றும் அபிவிருத்தி மையம் முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மக்காச்சோளம்
தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தற்போதைய விலை குவிண்டால் ரூ.1,480. வணிகர்களின் கூற்றுபடி தமிழகத்தில் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் தைப்பட்டத்தில் விளைந்த 15,000 டன் மக்காச்சோளத்தை விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.
கர்நாடக அரசு சுமார் 7 லட்சம் டன் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்துள்ளது. பிஹாரிலிருந்தும் குவிண்டாலுக்கு ரூ.1,400 என்ற விலையில் அதிக வரத்து இருப்பதால் விலை உயர்வு இல்லாமல் தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் ரூ.1,480-ஆக உள்ள மக்காச்சோளத்தின் விலை, அறுவடை காலமான நவம்பர் மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,400-ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம் லாபம் தரும் முக்கியப் பயிர்களில் ஒன்றாக கருதப்படுவதால் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. மத்திய அரசின் தேசிய தோட்டக் கலை வாரியத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2013-14-ல் தமிழகத்தில் வெங்காய சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி முறையே 0.39 லட்சம் ஹெக்டேர் மற்றும் 4.72 லட்சம் டன்கள் என கணக்கிடப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (செப்- நவ. 2013) சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.22 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவுக்கான காரணம், கடந்த ஆண்டில் நிலவிய அதிகபட்ச விலையால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியை அதிகரித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு ஏற்றுமதி விலையும் குறைந்துள்ளது. அறுவடை காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை மற்றும் தேவை அதிகரிப்பால் சின்ன வெங்காய விலை உயர வாய்ப்புள்ளது.
ஆய்வு முடிவுகளின்படி ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் சின்ன வெங்காயத்துக்கு அறுவடை நேரத்தில் அதாவது செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையில் கிலோ ரூ.22 முதல் ரூ.25 வரை விலை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விலையின் அடிப்படையில் விவசாயிகள் சின்ன வெங்காயம் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய துணை இயக்குநர் 94435 93971, 0431 2422142 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.