

கோவை: கோவையில் நகை தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஐசிசிஐ கோவை தலைவர் ஸ்ரீராமலு தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் பேசியதாவது: தொழில் தொடங்குவதற்கு விதிக்கப்பட்ட பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர்.
தொழில் துறையில் தேசிய அளவில் 14-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கோவை போன்ற வளர்ந்த மாவட்டங்களில் தொழிற் பூங்கா கட்டமைப்பு வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நகை தொழிலுக்கென தனி தொழிற்பூங்கா அமைத்தால் இரண்டு லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐசிசிஐ துணைத் தலைவர்கள் ராஜேஷ் லந்த், துரைராஜ், சுந்தரம், செயலாளர்கள் அண்ணாமலை. கார்த்திகேயன், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.