

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் சிட்கோ வளாகத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான ஷூ தயாரிக்கும் ஆலையை நிறுவ முன் வந்துள்ளது.
தடகளப் போட்டி வீரர்களுக்கு ஷூ (காலணி) தயாரிக்கும் தைவானைவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ‘போ சென்’ சீனா, வியட்நாம், இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தடகள வீரர்களுக்கான பிரத்யேக ஷூக்களை தயாரித்து, உலகம் முழுவதும் சந்தைப் படுத்தி வருகிறது.
அந்த நிறுவனம் தற்போது இந்தியாவிலும் கால்பதிக்க முயன்று, பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகளை உருவாக்க இடம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூரில் உள்ள சிட்கோ வளாகத்தில் தனது ஆலையை நிறுவ முன் வந்துள்ளது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், நமது ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறுகையில், “முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துவரும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத, தோல் பயன்படுத்தாத காலணி தயாரிக்கும் நிறுவனத்திற்கான இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்வு செய்துள்ளது. சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், ஆசனூரில் ரூ.2,302 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில், காலணி தயாரிப்பு உப பொருட்களை ஒருங்கிணைக்கும் பணி மட்டுமே நடைபெறும்.
இதன் மூலம் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பிடத்தக்க கூடிய அம்சம் என்னவெனில், 78 சதவீதம் வரையில் பெண்களே இதில் பணியமர்த்தப்படுவர். இந்தத் தொழிற்சாலைக்கான குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்க நீர் பயன்படுத்தப்படவுள்ளது.
அந்த நிறுவனம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம் சாலை வசதியே. தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் வளாகம் உள்ளதால், தங்களது பொருட்களை எளிதாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது என்பதாலேயே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் பொருளாதார ரீதியாக மேம்படைய வாய்ப்புண்டு” என்று தெரிவித்தார். குறிப்பிடத்தக்க கூடிய அம்சம் என்னவெனில், 78 சதவீதம் வரையில் பெண்களே இதில் பணியமர்த்தப்படுவர்.