Published : 05 Sep 2017 10:16 AM
Last Updated : 05 Sep 2017 10:16 AM

தொழில் முன்னோடிகள்: ஸ்டீவ் ஜாப்ஸ் (1955 - 2011)

 

ல்டேர் என்னும் கம்பெனி, கம்யூட்டர்கள் பாகங்களை விற்பனை செய்தார்கள். வாஸ்னியாக் இவற்றைப் பயன்படுத்தி, ஒரு கம்ப்யூட்டர் செய்தார். ஸ்டீவ் அசந்துபோனார். இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் தயாரித்து விற்க முடிவெடுத்தார்கள். 1,300 டாலர் மூலதனம் தேவைப்பட்டது. ஸ்டீவின் அப்பா பழைய கார் வியாபாரி. மகனுக்கு ஒரு பழைய கார் கொடுத்திருந்தார். வாஸ்னியாக்கிடம் பொக்கிஷமாக ஒரு கால்குலேட்டர் இருந்தது. நண்பர்கள் “சொத்துகளை“ விற்றார்கள். பணம் ரெடி.

ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி என்று ஸ்டீவ் பெயர் சூட்டினார். “நான் ஆப்பிள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த நாட்கள் அவை’’ என்பது அவர் சொன்ன காரணம். பீட்டில்ஸ் இசைக்குழு தங்களுடைய இசைத்தட்டுக்களை ஆப்பிள் ரெக்கார்ட்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். ஸ்டீவ் பீட்டில்ஸின் பரம ரசிகர். இந்தப் பாதிப்பு இன்னொரு பெயர்க் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள்.

ஏப்ரல் 1, 1976. முட்டாள்கள் தினத்தில் ஸ்டீவ் வீட்டு காரேஜில் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி தொடங்கியது. ஆப்பிள் 1 என்ற பெயரில் முதல் தயாரிப்பை அறிமுகம் செய்தார்கள். மார்க்கெட்டில் புதிதாக நுழையும் கம்பெனிகள் சாதாரணமாக லாபத்தைக் குறைவாக வைத்துக்கொள்வார்கள். குறைந்த விலை மூலம் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுக்கும் மார்க்கெட்டிங் வியூகம். ஸ்டீவ் வித்தியாசமானவர். உயர்ந்த தரம் இருந்தால், வாடிக்கையாளர்கள் அதிக விலை தருவார்கள் என்று நம்பினார். தயாரிப்புச் செலவு 220 டாலர்கள். விற்பனை விலை 500 டாலர்கள் என்று நிர்ணயித்தார். 100 கம்ப்யூட்டர்கள் விற்றார். வாஸ்னியாக்கிற்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

தனி மனிதர்களும் வீடுகளில் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தும் நாள் வரப்போகிறது என்று ஸ்டீவ் மனக்குறளி சொன்னது. இவர்கள் ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமானால், அது பயன்படுத்த எளிதாக, பார்வைக்கு அழகாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார். வந்தது ஆப்பிள் 2. சூப்பர் ஹிட். மூன்றே வருடங்கள். 60,000 கம்ப்யூட்டர்கள் விற்றனர். அவரும், வாஸ்னியாக்கும் லட்சாதிபதிகள்.

1980. ஆப்பிள் கம்பெனி ஐ.பி.ஓ வந்தது. கல்லாவில் நிறையப் பணம். மக்கின்டாஷ் என்னும் புது மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டார். ஸ்டீவை பொறுத்தவரை, தன் தயாரிப்புப் பொருள் கனகச்சிதமாக, வாடிக்கையாளர்களுக்குச் சுகானுபவம் தருபவையாக இருக்கவேண்டும். செலவு, லாபம் பற்றிக் கவலையே படமாட்டார். இந்தக் காலகட்டத்தில் வாஸ்னியாக் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அந்த உடல், மன பாதிப்பால், கம்பெனியின் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொண்டார்.

மக்கின்டாஷ் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஸ்டீவ் தொடர்ந்தால் இன்னும் பணத்தைக் கொட்டுவார், கம்பெனி மூழ்கிவிடும் என்று சக அதிகாரிகளும், முதலீடு செய்தவர்களும் பயந்தார்கள். உரசல்கள் விரிசல்களாயின. 1985. முப்பதாவது வயதில், தான் நிறுவிய, செதுக்கிச் செதுக்கி வளர்த்த கம்பெனியிலிருந்தே தூக்கி எறியப்பட்டார். இத்தோடு நிற்காமல், ஆப்பிளின் கண்டுபிடிப்புகளைத் திருடியதாக அவர் மேல் வழக்குத் தொடர்ந்தார்கள்.

இப்போது இன்னொரு சோகம், வளர்ப்புத் தாய் கிளாரா மரணப் படுக்கையில். ஸ்டீவின் பெற்றோர் பற்றிய விவரங்கள் தந்தார். ஸ்டீவ் அம்மாவைச் சந்தித்தார். அப்பா ஜண்டாலி அவரை விட்டுவிட்டுப் போனதையும், கல்லூரிப் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு ஹோட்டல் சர்வராக வேலை பார்ப்பதும் தெரிந்தது. அம்மாவை நடுத்தெருவில் விட்ட அப்பாவைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

ஆப்பிளை விட்டு வெளியே வந்த ஸ்டீவ் நெக்ஸ்ட் என்னும் கம்ப்யூட்டர் தயாரிப்புக் கம்பெனி தொடங்கினார். வடிவமைப்பில் அவர் மாற்றங்கள் செய்துகொண்டேயிருந்தார். இதனால், 1986 - இல் தயாராக வேண்டிய கம்ப்யூட்டர் இரண்டு வருடக் கால தாமதமாய் 1988 - இல்தான் ரெடியானது. கைப்பணம் முழுக்கக் கரைந்து கடனில் மூழ்கும் நிலை.

கிடைத்தது ஒரு துடுப்பு. ஜார்ஜ் லூக்காஸ் அமெரிக்காவின் பிரபல சினிமாத் தயாரிப்பாளர், இயக்குநர். ஸ்டார் வார்ஸ், இந்தியானா ஜோன்ஸ் ஆகியவை இவருடைய தயாரிப்புகள். இவர் பிக்ஸார் என்ற கம்பெனி நடத்தினார். கிராஃபிக்ஸ் வேலைகள் செய்வதற்கான ஸ்பெஷல் கம்ப்யூட்டர், அதற்கான மென்பொருள் ஆகியவை தயாரித்தது. அனிமேஷனுக்கு அன்றைய கால கட்டத்தில் அதிக வாய்ப்புகள் இருக்கவில்லை. இதனால், அன்று பிக்ஸார் உப்புமா கம்பெனியாக இருந்தது. லூக்காஸுக்குப் பணத் தட்டுப்பாடு. உப்புமாவை ஸ்டீவுக்குப் பத்து மில்லியன் டாலர்களுக்கு விற்றார்.

வாழ்க்கையில் பல சந்தோஷக் கதவுகள் திறக்கத் தொடங்கின. 1988. பிக்ஸார் கம்பெனி, டின் டாய் என்னும் ஐந்து நிமிடக் கார்ட்டூன் குறும்படம் தயாரித்தார்கள். இந்தப் படம் ஆஸ்கார் பரிசு பெற்றது. பல சினிமா பிரபலங்கள் பிக்ஸாரை கவனிக்கத் தொடங்கினார்கள்.

லாரென் என்னும் பெண்ணைச் சந்தித்தார். திருமணம். இன்னொரு திருப்பம். வால்ட் டிஸ்னி கம்பெனி, டாய் ஸ்டோரி என்னும் உலகின் முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் படம் தயாரிக்க முடிவு செய்தார்கள். தொழில்நுட்பம் பிக்ஸாருடையது. டிக்கெட் வசூலில் எட்டில் ஒரு பங்கு பிக்ஸாருக்கு. 1995 - இல் வெளியான டாய் ஸ்டோரி 30 மில்லியன் டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு, 362 மில்லியன் டாலர் குவித்தது. இந்த வெற்றிச் சூட்டில் பிக்ஸரின் பங்குகளைப் பொதுமக்களுக்கு ஸ்டீவ் வழங்கினார். அமோக விற்பனை. ஸ்டீவின் 10 மில்லியன் முதலீடு 1,200 மில்லியனாக விசுவரூபம் எடுத்தது.

ஸ்டீவ் ஆப்பிளைவிட்டு வந்த ஆறு வருடங்களில் ஆப்பிள் கம்பெனி பாதாளத்துக்குள் விழுந்துகொண்டிருந்தது. அவரைத் திருப்பி அழைத்தார்கள். சி.இ.ஓ. ஆனார். நிர்வாகத் திறமை, பழைய தவறுகளிலிருந்து கற்ற பாடம் – ஒரே வருடத்தில் லாபம் காட்டினார். 1998 - இல் ஸ்டீவ் அறிமுகம் செய்த ஐ மாக் கம்ப்யூட்டர் சக்கைபோடு போட்டது. முதல் வருட விற்பனை எட்டு லட்சம். ஆப்பிளின் 22 வருட வரலாற்றில் வேறு எந்த மாடலும் தொட்டிராத சாதனை.

இது ஆரம்பம்தான். ஆப்பிள் கம்பெனி கம்ப்யூட்டர்களை தாண்டி வளரவேண்டுமென்று ஸ்டீவ் விரும்பினார். அன்றைய MP 3 பிளேயர்களில் பல பிரச்சினைகள். 2001-ல்

ஐ பேட் அறிமுகம். அழகாக, கைக்கு அடக்கமாக வடிவமைப்பு, 1000 பாடல்கள் சேமிக்கும் நினைவாற்றல்.

அதே வருடம். தன் இசைப் பயணத்தில் ஆப்பிள் அடுத்த அடி எடுத்து வைத்தது. ஏராளமானவர்கள் இணையதளங்களிருந்து தங்களுக்குப் பிடித்த பாட்டுகளை டவுன்லோட் செய்துகொண்டிருந்தார்கள். இந்த ஒலிப்பதிவின் தரம் மகா மட்டம். இந்த டவுன்லோடால் இசை நிறுவனங்களின் சி.டி. விற்பனை சரிந்துகொண்டிருந்தது. ஸ்டீவ் இசை நிறுவனங்களுடன் பேசி, டவுன்லோட் செய்யும் ஏகபோக உரிமையை ஆப்பிளுக்குக் வாங்கினார். ஐ ட்யூன்ஸ் என்னும் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தார். ஒரு பாட்டுக்கு டவுன்லோட் கட்டணம் வெறும் 99 சென்ட்கள் மட்டுமே. (சுமார் 7 ரூபாய்.) வசூலில் 70 சென்ட் ரெக்கார்ட் கம்பெனிகளுக்கு, 30 சென்ட் ஆப்பிளுக்கு.

அடுத்ததாக என்ன செய்யலாம்? செல்போன்கள். மனித உடலின் அவயங்களில், கை விரல்கள் அற்புதமான படைப்பு என்பது ஸ்டீவின் எண்ணம். ஒரு நாள் தன் வடிவமைப்பாளர்களிடம் சொன்னார், “நம் செல்போனில் கீ போர்ட் இருக்கக்கூடாது. விரல்களால் இயக்கவேண்டும்.”

முடியாது என்று மறுத்தார்கள். வழக்கம் போல் ஸ்டீவ் விடாப்பிடியாக நின்றார். சில மாதங்கள். முடியாதது நடந்தது. 2007-ல்

ஐ போன் அறிமுகம் செய்யப்பட்டது.

2010. இன்னொரு மாபெரும் வெற்றித் தயாரிப்பு. ஐ பேட் என்னும் டாப்லெட் கம்ப்யூட்டர். இப்படி வரிசையாக, ஐ மாக், ஐ பாட், ஐ ட்யூன்ஸ் , ஐ பேட், ஐ போன் என அட்டகாசத் தயாரிப்புகள் வந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும்போது, ஸ்டீவ் வாழ்க்கையைத் தூள் தூளாக்கும் சுனாமி. 1997 முதலே அடிக்கடி சோர்வடையத் தொடங்கினார். வயிற்றிலும், இடுப்பிலும் வலி. பல சிகிச்சைகள். 2003. கணையத்திலும், கல்லீரலிலும் புற்றுநோய். அறுவை சிகிச்சையில் கணையத்தின் ஒரு பகுதியை நீக்கினார்கள். கீமோதெரபி தொடங்கியது.

2009. சிறுநீரகம் செயலிழந்தது. மாற்று சிறுநீரகம் பொருத்தினார்கள். அடுத்த இரண்டு வருடங்கள். மரணம் தன் கதவைத் தட்டிக்கொண்டேயிருக்கும்போதும், பணிகளைத் தொடர்ந்தார். 2011. இவர் நூறாண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடாதா என்று கோடானு மக்களை ஏங்கவைத்தபடி, ஸ்டீவ் வாழ்க்கை 56 வயதில் முடிந்தது.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x