

புதுச்சேரி: சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு கடல்வழி சரக்கு போக்குவரத்து தொடங்கியது. முதலாவது சரக்கு கப்பல் புதுச்சேரி வந்தடைந்தது.
சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க, கடந்த 2017-ம் ஆண்டில், சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அதன் பிறகு இத்திட்டம் தொடங்கப்படவில்லை. பின்னர் மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தில் ரூ.40 கோடியில் புதுச்சேரி துறைமுகம் 3.5 மீட்டர் ஆழப்படுத்தப்பட்டது. அதையடுத்து அண்மையில் வந்த கப்பல் தனது ஆய்வு பணியை முடித்துக்கொண்டு கண்டெய்னர்களை கொண்டு வருவதற்காக சென்னை துறைமுகம் சென்றது.
அதையடுத்து சென்னை- புதுச்சேரி இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ‘ஹோப் செவன்’ என்ற கப்பல் மூலம் வாரத்துக்கு இருமுறை புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே சரக்குகள் ஏற்றிச் செல்ல உள்ளது. இந்தக் கப்பல் சென்னை - புதுச்சேரி இடையே 12 மணி நேரம் பயணிக்கும். இதில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் 106 கன்டெய்னர்கள் இடம் பெறும். அவற்றில் 86 கன்டெய்னர்கள் சாதாரண நிலையிலும், 20 கன்டெய்னர்கள் குளிரூட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். சென்னையில் சரக்குகள் ஏற்றி வந்த கப்பல் இன்று புதுச்சேரி வந்தடைந்தது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் புதுச்சேரி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கத்துறை ஆய்வுக்கு பிறகு ஏற்றுமதிக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இங்கிருந்து சிறிய ரக சரக்கு கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
சென்னை - புதுச்சேரி இடையே சாலை மார்க்கமாக கன்டெய்னர்களை எடுத்துச் செல்லும்போது ஒரு கன்டெய்னருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், கப்பல் மூலம் எடுத்துச் செல்லும்போது ரூ. 7ஆயிரம் குறையும். அத்துடன் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தில் இடநெருக்கடி உள்ளிட்ட கூடுதல் சுமை குறையும் சூழல் ஏற்படும். அத்துடன் புதுச்சேரி துறைமுகத்தில் கண்டெய்னர்கள் கையாளும் பணி அதிகம் நடைபெறும்பட்சத்தில் மறைமுகமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது .