

ஹாங்காங்க்: ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. அதன் பங்கு வெளியீடு நிறுத்தப்பட்டதுடன், நிறுவனப் பங்குகளின் மதிப்பும் பாதாளத்துக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக, உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருந்த கவுதம் அதானி தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் அதானி குழுமத்துக்கான தரக் குறியீட்டை மறுபரிசீலனை செய்து மதிப்பீடுகளையும் குறைத்துள்ளன.
இந்த நிலையில், இழந்த பெருமையை மீட்கும் வகையில் அதானி குழுமம் தான் பெற்ற கடன்களை ஒவ்வொன்றாக விரைவான முறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக , அதானி குழுமம் இந்த மாதத்தில் மட்டும் 790 மில்லியன் டாலர் (ரூ.6,500 கோடி) கடன்களை திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளது.
மூன்றாண்டு கால கடன் வசதி அடிப்படையில் 800 மில்லியன் டாலர் வழியாக 2024 பத்திரங்களை அதானி கிரீன் எனர்ஜி மறுநிதியளிப்பற்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
140 பில்லியன் டாலர் இழப்பு: ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எதிர்மறையான ஆய்வறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 140 பில்லியன் டாலர்களுக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.