

கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் இணையதள பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு என்ற தலைப்பில் கோவையில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இணையதள பாதுகாப்பு கருத்தரங்கு தொடக்க விழாவில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் துறை நிர்வாக இயக்குநர் விஷ்ணு தலைமை வகித்து பேசுகையில், “சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் மொத்த வளர்ச்சியையும் நிர்ணயிப்பதில் இணையதள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முக்கிய பங்கு வகிக்கும்” என்றார். இணையதள பாதுகாப்புக்கான தீர்வுகள் வழங்கும் தெற்காசிய நிறுவனத்தின் இந்திய விற்பனை பிரிவின் துணைத் தலைவர் விசாக் ராமன் பேசுகையில், “இணையதள பாதுகப்பு வழிமுறைகளை எளிமையாக்குவது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
ஹேக்கிங் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றார். சிஐஐ கோவை கிளை தலைவர் பிரசாந்த் சுப்பிரமணியன், துணைத் தலைவர் செந்தில் கணேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
சுகாதார பாதுகாப்பு கருத்தரங்கில் ‘ஜிஇ ஹெல்த் கேர்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்ராவன் சுப்பிரமணியம் பேசுகையில், “சுகாதாரத் துறை வளர்ச்சி மற்றும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பயன்பாடு காரணமாக இன்று பிறக்கும் குழந்தை 100 ஆண்டுகள் வாழ வழி கிடைத்துள்ளது.
அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில் நுட்பங்கள் மிகவும் சிரமமான சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு உதவும் வகையில் உள்ளன. ரோபோட் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் அதிக பயன் உள்ளது என்ற போதும் அவற்றை பயன்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான சில பிரச்சினைகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது” என்றார்.
சிஐஐ கோவை சுகாதாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் புவனேஸ்வரன் நன்றி கூறினார். நேற்று நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் முதன்மை செயலர் கிருஷ்ணன், ‘டிவிஎஸ்’ நிறுவனத்தின் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் நிர்வாக இயக்குநர் ரவி விஸ்வநாதன், ஜப்பான் தூதரக கவுன்சில் ஜெனரல் மசாயுகிடகா,
தென் கொரிய தூதரக கவுன்சில் ஜெனரல் யங்சியுப்கவோன், சிங்கப்பூர் தூதரக கவுன்சில் ஜெனரல் எட்கர்பங், தாய்வான் வர்த்தக மையத்தின் இயக்குநர் ஜூலிஷ்சிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.