

சென்னை: "மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளுக்கான ஒப்பந்தம் மார்ச் 7ம் தேதி கோரப்பட்டு, வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பணிகள் தொடங்கும்" என்று சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.
சென்னை துறைமுகம் முதல் புதுச்சேரி மாநிலம் உப்பளம் துறைமுகம் வரையிலான தனியார் சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த சேவையை சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "இந்தத் திட்டத்தின் மூலம் கடல்வழிப் போக்குவரத்து ஊக்குவிக்கப்படும். போதுமான அளவு சரக்குகள் கிடைத்தால் இந்த சேவை எண்ணூர் துறைமுகம் வரை விரிவுபடுத்தப்படும். வாரத்துக்கு இரண்டுமுறை இந்த சேவை நடைபெறும்.
இந்தத்திட்டம் வரும்காலங்களில் பயணிகள் போக்குவரத்துக்கு உதவிகரமாக இருக்கும். இந்த சரக்கு கப்பல் போக்குவரத்தால், கடல்வளத்திற்கும், மீன்களுக்கும், மீனவர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் இத்திட்டம் கண்டிப்பாக உதவும்.
இத்திட்டத்திற்காக புதுச்சேரி துறைமுகத்தில் தூர்வாரும் பணிகளுக்காக சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்தால் மாசுபாடும் குறைவு, நேரம் மற்றும் செலவும் குறைவாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இன்னும் அதிகரிக்கும். இந்த சேவை மூலம், புதுச்சேரி பக்கத்தில் இருக்கின்ற குறிப்பாக கடலூர், புதுச்சேரி, சேலம், நாமக்கல், திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளுக்கான ஒப்பந்தம் மார்ச் 7 ஆம் தேதி கோரப்பட்டு, வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பணிகள் தொடரும்" என்று அவர் கூறினார்.