Published : 12 Sep 2017 09:51 AM
Last Updated : 12 Sep 2017 09:51 AM

தொழில் முன்னோடிகள்: பில் கேட்ஸ் (1955)

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ, தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

- பில் கேட்ஸ்

லகம் இதுவரை, பல்லாயிரம் பிசினஸ் மேதைகளைச் சந்தித்திருக்கிறது. பில் கேட்ஸைவிடத் திறமையான கண்டுபிடிப்பாளர்கள், நிர்வாக மேதைகள், கஸ்டமர்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாய்க் கணிப்பவர்கள் ஏராளம், ஏராளம். ஆனால், பணம் கொட்டும் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைத் துரத்தித் துரத்திக் காசாக்குவதிலும் பில் கேட்ஸை மிஞ்ச ஆளே கிடையாது. இதனால்தான், கடந்த 23 வருடங்களாகத் தயாரிக்கப்பட்டு வரும் உலகக் கோடீஸ்வரர்களில் பட்டியலில் 19 வருடங்களாக முதல் இடம் பிடித்து வருகிறார்.

****

1955. அக்டோபர் 28. அமெரிக்க சியாட்டில் நகரத்தில் வசித்த வில்லியம், மேரி தம்பதிகளின் மகன் வில்லியம் ஹென்றி கேட்ஸ் 3. ஆமாம், இதுதான் பில் கேட்ஸின் முழுப் பெயர். அப்பா பிரபல வக்கீல். அம்மா பள்ளி ஆசிரியை. பள்ளியில் சேர்த்தார்கள். பையனுக்குப் படிப்பில் விருப்பமே இல்லை. மகன் உதவாக்கரையோ என்று பெற்றோருக்குக் கவலை.

பில் வயது ஏழு. சியாட்டிலில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பொடியனுக்கு வேடிக்கை காட்ட அம்மா கூட்டிக்கொண்டு போனார். நடந்தது ஆச்சரியம். ஒவ்வொரு ஸ்டாலாகப் போனான். அவர்களைக் கேள்விகளால் துளைத்தான். “இதிலாவது ஈடுபாடு காட்டுகிறானே” என்று பெற்றோருக்குக் கொஞ்சம் ஆறுதல்.

அம்மா, அப்பாவை அறிவியல் தொடர்பான கேள்விகளால் துளைத்தான். அவர்கள் புத்தகங்களை அவனுக்கு அறிமுகம் செய்தார்கள். படிப்போ படிப்பு. ஒவ்வொரு பள்ளி விடுமுறையின்போதும், முப்பது அறிவியல் புத்தகங்கள் படித்து முடித்துவிடுவான். என்சைக்ளோப்பீடியா எப்போதும் அருகிருக்கும் துணையானது.

பில்லுக்குப் பத்து வயதானது. பள்ளியில் சக மாணவர்களோடு பழகமாட்டான், விளையாடப் போகமாட்டான். படிப்பில் கடைசி பெஞ்ச். மணிக்கணக்காக விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பான். கேட்டால், “யோசிச்சுக்கிட்டிருக்கேன்” என்பான்.

மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள். பரிசோதித்த அவர் சொன்னார் ``பில் அதி புத்திசாலி. சுற்றியிருக்கும் உலகம் அவன் வேகத்துக்கு இயங்க மறுக்கிறது. அதனால்தான், தனிமையில் இனிமை தேடுகிறான்.”

பள்ளிக்கூடத்தை மாற்றினாலாவது பையன் திருந்துவானா என்று பெற்றோர் யோசித்தார்கள். லேக்சைட் என்னும் புகழ் பெற்ற பள்ளியில் சேர்த்தார்கள். அங்கும் முதலில் இதே கதைதான். ஆனால், கொஞ்ச நாட்களில் ஒரு மாற்றம். காரணம், கம்ப்யூட்டர்.

1960-ம் ஆண்டு காலகட்டத்தில் கம்யூட்டர்கள் கம்பெனிகளும், உயர்மட்டத்தவர்களும் பயன்படுத்திய கருவியாக மட்டுமே இருந்தது. லேக்சைட் பணக்காரக் குழந்தைகள் படித்த பள்ளி. ஆகவே, அங்கு கம்ப்யூட்டர் இருந்தது. ஆனால், ஒரு சில மாணவர்களே பயன்படுத்தினார்கள்.

பில், பேசிக் என்னும் கணினி மொழி படித்தான். கம்ப்யூட்டரில் சின்னச் சின்ன புரோக்ராம்கள் செய்யத் தொடங்கினான். அப்பாடா, மனதுக்குப் பிடித்த ஒரு காரியத்தை முதன் முதலாகக் கண்டுபிடித்துவிட்டான். விருப்ப விளையாட்டு வெறிபோலானது. இரவில் வீட்டுக்குத் தெரியாமல் பள்ளிக்கூடம் போவான். வாட்ச்மேன் தயவில் பள்ளிக் கம்ப்யூட்டரைத் தட்டுவான்.

ஒரு நாள். திடீரென, லேக்சைட் ஸ்கூல், மாணவர்களுக்குத் தரும் இலவசக் கம்ப்யூட்டர் சேவையை நிறுத்தியது. கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. அத்தனை பணம் செலவிட பில்லுக்கு விருப்பமில்லை. கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன் (CCC) என்னும் நிறுவனத்திடம் போனான். அவர்கள் இன்னொரு நிறுவனத்திடம் கம்ப்யூட்டர் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஏதாவது பிரச்சனை வந்தால், வாடகை தரவேண்டாம். பில் CCC – உடன் டீல் போட்டான். அவன் கம்ப்யூட்டரில் பிரச்சனைகளை உருவாக்குவான். CCC – க்கு வாடகை மிச்சம். பதிலாக, பில்லுக்கும், நண்பர்களுக்கும் கட்டணம் இல்லாமல் கம்ப்யூட்டர் உபயோகிக்க அனுமதி தந்தார்கள். வெற்றிகரமாகச் சில மாதங்கள் ஓடின. வந்தது சோதனை. CCC நஷ்டம் கண்டது. மூடியது.

பில் மனதில் எப்போதுமே, அதீத தன்னம்பிக்கையும், சுய பிம்பமும் உண்டு. வயது 16. மூன்று நண்பர்களோடு சேர்ந்து, Lakeside Programmers Group என்னும் கம்பெனி தொடங்கினான். இன்ஃபர்மேஷன் சயின்சஸ் என்னும் நிறுவனம், தங்களுக்கான மென்பொருளை வடிவமைக்கும் பணியைத் தந்தது. முடித்துக் கொடுத்தார்கள். கை நிறையப் பணம். கம்ப்யூட்டரை அவர் வயதுப் பையன்கள் விளையாட்டு சாதனமாகப் பார்த்தபோது, பில் மூளை பிசினஸாகப் பார்த்தது.

1970. அமெரிக்காவின் பல நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எந்தெந்த நேரங்களில் போக்குவரத்து அதிகம் என்று கண்டுபிடிக்க, அரசு ஒரு சிறு கருவி, காகித டேப் கொண்ட கறுப்புக் குழாயை முக்கிய வீதிகளில் வைத்தார்கள். ஒவ்வொரு வாகனம் குழாய் மேல் ஏறும்போதும், டேப்பில் ஒரு துளை விழும். இந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் பதிவு செய்யவேண்டும். பணம் என்றால் பறந்துவரும் பில் இந்தப் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக்கொண்டான். நல்ல வருமானம்.

கால்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, பில் மனம் எப்போதும் எதிர்காலத்தில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில். பால் ஆலென் என்னும் சக மாணவனோடு கை கோர்த்து, Traf – O – Data என்னும் கம்பெனி தொடங்கினான். ஒரு எந்திரம் கண்டுபிடித்தார்கள். இதில், காகித டேப்களை ஒரு முனையில் சொருகினால், மறு முனையில் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். நல்ல விற்பனை. அரசாங்கத்தின் சில கொள்கை மாற்றங்களால், ஆர்டர்கள் வரத்து நின்றது. கம்பெனி மூடியது.

பதினேழு வயதுக்குள் இத்தனை பிசினஸ் ஏற்ற இறக்கங்கள்.

படிப்பில் கவனம் செலுத்த பில் முடிவு செய்தார். அமெரிக்கக் கல்லூரிகளுக்கான Scholastic Aptitude Test (SAT) என்னும் நுழைவுத் தேர்வு எழுதினார். 1600 – க்கு 1590 மார்க்! (10 மார்க்கை எங்கே தவற விட்டோம் என்று பில் கவலைப்பட்டிருக்கலாம். அவர் அப்படிப்பட்ட ஆசாமி.)

பிரபல ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அப்பா வழியில் தொடரும் ஆசையோடு சட்டப் படிப்பு. வகுப்பைவிட, கம்ப்யூட்டர் அறையில் அதிக நேரம் செலவிட்டார். இந்தக் காலகட்டத்தில், பழைய பங்காளி பால் ஆலெனோடு நட்பு தொடர்ந்தது. அவர் ஹனிவெல் என்னும் பிரபல கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். பிசினஸ் நடத்தியவர்கள் எப்போதும், ரத்தம் குடித்த புலி மாதிரி. மனம் எப்போதும், பிசினஸ் பின்னால் அலையும். பில் அலைந்தார்.

1975, பில் வயது 20. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் வருடப் படிப்பு. பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் என்னும் பத்திரிகையில், MITS என்னும் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த புதிய கம்ப்யூட்டர் பற்றிய அட்டைப்படக் கட்டுரை. கம்ப்யூட்டர் விரைவிலேயே கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கருவியாகப் போகிறது என்று பில் கணித்தார். இந்த வாய்ப்பைத் தவற விட்டுவிடக்கூடாது.

MITS நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார்.

”உங்கள் கம்ப்யூட்டர் பிரமாதமாக இருக்கிறது. அதில் பேசிக் மொழியைப் பயன்படுத்த முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.”

MITS தொடர்பு கொண்டார்கள். பில் ஒரு ரீல் விட்டார், “உங்கள் கம்ப்யூட்டருக்கான பேசிக் மொழி எங்களிடம் தயாராக இருக்கிறது.”

வரச் சொன்னார்கள். பில் போனார். ஒரு மாத அவகாசம் வாங்கிக்கொண்டு வந்தார். அவரும், பால் ஆலெனும் இரவு பகலாக உழைத்தார்கள். பணியை வெற்றிகரமாக முடித்தார்கள். அசந்துபோன MITS இருவருக்கும் முழுநேர வேலை கொடுத்தார்கள். பில் வசதியான குடும்பம். சொந்தக் காலில் நிற்க முடிவு செய்தார். பால் ஆலென் வேலையில் சேர்ந்தார்.

இருவரும் பிசினஸ் முயற்சியைத் தொடர முடிவு செய்தார்கள். படிப்பையும், வளரும் பிசினஸையும் சேர்த்துச் சமாளிக்க முடியாது என்று பில் உணர்ந்தார். படிப்பை விட்டார். 1975. ஏப்ரல் 4. மைக்ரோசாப்ட் பிறந்தது. மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்காக சாஃப்ட்வேர் தயாரிக்கும் கம்பெனி என்பதால் இந்தப் பெயர்.

இன்று பில் கேட்ஸ் சொத்து 87 பில்லியன் டாலர்கள்; பால் ஆலென் சொத்து 20 பில்லியன் டாலர்கள். இருவரும் தொடங்கிய கம்பெனி மைக்ரோசாஃப்ட். அப்புறம், ஏன் இத்தனை சொத்து வித்தியாசம்? பில் செய்த சின்ன ட்ரிக். கம்பெனி தொடங்கியபோது பில் நண்பரிடம் சொன்னார், “உனக்கு வேலை இருக்கிறது. நான் முழுநேரமாக பிசினஸைப் பார்த்துக்கொள்கிறேன். ஆகவே, எனக்கு 60 சதவீதம், உனக்கு 40 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம்.” பால் ஆலென் சம்மதித்தார்.

இதுதான் பில்லின் தனித்துவ சாமர்த்தியம்!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x