

புதுடெல்லி: டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் ஆசிய பொருளாதார உரையாடல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியதாவது:
நாட்டில் ஒரு சிறிய பிரிவினர் மட்டுமே கடினமாக உழைக்கின்றனர். பிரதமர் மோடியின் இலக்குகளை நிறைவேற்ற இன்றியமையாத கலாசாரத்தை பெரும்பான்மை யான மக்கள் இன்னும் உள்வாங்கவில்லை. 1940-ம்ஆண்டுகளின் பிற்பகுதியில் சீனா,இந்தியா ஆகிய நாடுகள் ஒரே நிலையில் இருந்தன. சீனா, இந்தியாவை விட ஆறு மடங்கு பெரிதாக வளர்ந்துள்ளது.
கடினமாக உழைப்பவர்கள் குறைவு: இந்தியாவில் கடினமாக உழைக்கும் கூட்டம், ஒரு சிறிய அளவிலேயே உள்ளது. இவர்கள் நேர்மையான, நல்ல பணி நெறிமுறை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். ஆனால், பெரும்பான்மையானோர் அப்படி இல்லை. இதை கூறுவதால் என்னை தேசவிரோதி என்று அழைக்க வேண்டாம்.
2006-ல் சீனாவின் ஷாங்காய் நகரில் நான் நிறுவனத்தை நிறுவ முயற்சி செய்தேன். அதற்காக நான் தேர்வு செய்த இடத்தை (25 ஏக்கர் பரப்பு), அதற்கடுத்த நாளே எனக்கு சீன நகர மேயர் ஒதுக்கி அதற்கான ஆணையை என்னிடம் தந்தார். அதுபோன்ற வேகம் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் கீழ்மட்டத்தில் நிலவும் ஊழலால், இதுபோன்ற சூழல் இங்கு இல்லை.
நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், விரைவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அவை விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும். அதனை தொந்தரவு செய்யக் கூடாது. தேவையற்ற தடைகள் கூடாது. பாரபட்சமற்ற நடவடிக்கை வேண்டும். இவ்வாறு நாராயணமூர்த்தி பேசினார்.