

பெங்களூரு: ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன் ஒருபகுதியாக ஜி20 நாடுகளின் நிதித்துறை, மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஜானெட் யெல்லன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, கிரிப்டோ கரன்சி செயல்பாடுகள், உலகளாவிய கடன் பாதிப்புகள், எரிசக்தி பயன்பாடு குறித்து இருவரும் விரிவான முறையில் ஆலோசித்தனர்.
மேலும், கரோனா தொற்றிலிருந்து உலகுக்கு கிடைத்த பாடங்கள் குறித்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக இருக்க மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜி20 நாடுகளின் நிதித் துறை மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.