

இந்திய வங்கிகளின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடையாது என்று தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் அறிக்கை கூறியுள்ளது. மேலும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், இந்திய வங்கிகள் கொடுத்த கடனில் 15 சதவீதம் வரை வாராக்கடனாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய எஸ் அண்ட் பி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சேத் சாப்ரியா (Seth Chhabria) கூறியதாவது:
இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு அடுத்த 12 மாதங்களில் மேலும் அதிகரிக்கும். 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வங்கிகள் வழங்கிய மொத்த கடன்களில் 13 சதவீத முதல் 15 சதவீதம் வரையில் வாராக்கடனாக மாறும். இதில் பெரும்பகுதி கடன் பொதுத்துறை வங்கிகள் அளித்தவையாக இருக்கும்.
எஸ் அண்ட் பி தர மதிப்பீட்டில் கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் பொதுத்துறை வங்கிகளில் தரக் குறியீடு மிக மோசமான அளவில் உள்ளது. ஆண்டுக்காண்டு வாராக்கடன் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வாரக்கடனுக்கான அதிக ஒதுக்கீடுகளால் பொதுத்துறை வங்கிகள் குறைவான லாபத்தில் உள்ளன. ஆனால் இன்னொருபுறம் கடன் வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்திய பொதுத்துறை வங்கிகள் தொடந்து வெளியிலிருந்து மூலதனம் செலுத்தப்படுவதை நம்பியிருக்கின்றன. இந்த வகையிலேயே பேசல் 3 க்கான மூலதனத் தேவையை சந்திக்கின்றன. அல்லது தங்களிடமுள்ள முக்கியமில்லாத சொத்துகளை விற்பது மற்றும் முதலீடுகளை விற்பதன் மூலம் மூலதனத் தேவையை சந்திக்கின்றன என்றார். பொதுத்துறை வங்கிகள் மிகக் குறைந்த மூலதனத்தைக் கொண்டே இயங்கி வருகின்றன என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் மூலதன தேவையை சமாளிக்க மத்திய அரசு ரூ.70,000 கோடியை அறிவித்துள்ளது. அதில் 2018 மற்றும் 19 நிதி ஆண்டுகளில் ரூ.10,000 கோடி வீதம் அளிக்க உள்ளது. இந்த தொகை பொதுத்துறை வங்கிகளின் மூலதனப் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு போதுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
மூலதனப் பற்றக்குறை மற்றும் அதிகரிக்கும் வாராக் கடன் போன்ற சிக்கல்கள், பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதற்காக வழியை அரசுக்கு ஏற்படுத்தும். பொதுத்துறை வங்கிகளின் மூலதன தேவைக்கு ஏற்ப இந்தியா அசாதாரணமான உதவிகளை செய்யும்பட்சத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகளில் தர மதிப்பீடு முக்கிய இடத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.