பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.7,500 வரை இருக்கும்: வேளாண் பல்கலை. கணிப்பு

பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.7,500 வரை இருக்கும்: வேளாண் பல்கலை. கணிப்பு
Updated on
1 min read

கோவை: பருத்தியின் சராசரி பண்ணை விலை குறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பஞ்சாலைகளின் குன்றிய தேவை காரணமாக, பருத்தியின் விலை சமீப காலமாக சற்று குறைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில், பருத்தி முக்கியமாக மாசிப்பட்டம், ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகைப் பட்டம் ஆகிய பருவங்களில் விதைக்கப்படுகிறது.

தற்போது, ஆடிப்பட்டம் முடியும் தருவாயில் மாசிபட்டம் விதைப்பு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு பருத்தியின் முக்கிய நுகர்வோராக திகழ்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் 1.48 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 3.6 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட பரப்பளவில் 7.5 சதவீதமும், உற்பத்தியில் 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

பருத்தி ஆலையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

விலை முன்னறிவிப்புத் திட்டமானது, விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 26 ஆண்டுகளாக கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தியின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் அடிப்படையில், பருத்தியின் சராசரி பண்ணை விலை மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப் படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in