

மும்பை: தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 927 புள்ளிகள், நிஃப்டி 272 புள்ளிகள் என தலா 1.53% சரிந்தன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து அமெரிக்கப் பங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்டது.
அது இந்தியப் பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுவதாக நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த அறிவிப்பும் சர்வதேச அளவில் பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தது. இந்தச் சூழலில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து தங்கள் பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்துள்ளது. இவை தவிர, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு வீழ்ச்சி பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரண மாக இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிந்து 59,744 ஆகவும் நிஃப்டி 272 புள்ளிகள் சரிந்து 17,554 ஆகவும் நிலைகொண்டது. அதிகபட்சமாக, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10.58% சரிந்தது. அதானி போர்ட்ஸ் 6.19%, கிராசிம் -3.61%, பஜாஜ் பைனாஸ் -2.83%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் -2.80% என்ற அளவில் சரிந்தன.
தொடர்ந்து பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிற நிலை யில், கடந்த 4 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.அதானி குழுமத்தின் சரிவு பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.