

லண்டன்: பிரிட்டனில் ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை’ திட்டம் பணியாளர்களிடத்திலும், நிறுவனங்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கரோனாவிற்குப் பிறகு உலக அளவில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக தொழில், மருத்துவத் துறைகளில் நாளும் மாற்றங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் வேலை செய்யும் சோதனைத் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சோதனையை ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைகழங்கள் மற்றும் பாஸ்டன் கல்லூரி போன்றவை ஒருங்கிணைத்துள்ளன.
முதற்கட்டமாக லண்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தச் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. வங்கிகள், மருத்துவமனைகள், அனிமேஷன் ஸ்டூடியோக்கள் என உலகம் முழுவதும் சுமார் 150 நிறுவனங்களைச் சேர்ந்த 7,000 பணியாளர்கள் இந்தச் சோதனையில் பங்கேற்றனர். இந்தச் சோதனை முறையில், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்தாலும் ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் அளிக்கப்படும். குறைந்த நாட்கள் வேலை செய்வதன் மூலம் நிறுவனங்கள் தங்களது வேலைக்கான இலக்கை அடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவே இந்தச் சோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
அதன்படி, பிரிட்டன் முழுவதிலும் உள்ள 61 நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள், ஜூன் மற்றும் டிசம்பர் 2022-க்கு இடைப்பட்ட மாதங்களில் வாரத்துக்கு நான்கு நாட்கள் அதாவது சராசரியாக 34 மணி நேரம் பணிபுரிந்துள்ளனர். இதில், 56 நிறுவனங்கள், அதாவது 92 சதவீதத்தினர் இதே முறையில் பணி செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் திட்டதால் உற்பத்தித் திறனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வாரத்துக்கு 4 நாட்கள் வேலை எனும்போது பணியாளர்கள் நேரத்தை கவனத்தில் கொண்டு கவனமாக உள்ளனர். மேலும், இம்முறை அவர்களது வேலை - தனிப்பட்ட வாழ்க்கையில் சமநிலை மேம்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து 4 நாட்கள் வேலைத் திட்டத்தின் பிரச்சார இயக்குநர் ஜோ கூறும்போது, “ நான்கு நாள் வேலை வாரத்தை நோக்கிய இயக்கத்திற்கு இது ஒரு முக்கிய திருப்புமுனைத் தருணம்” என்று தெரிவித்துள்ளார். இந்தச் சோதனை திட்டம் பிரிட்டன், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.