

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
கடந்த மாதம் 20-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், 4 நிலை கண்காணிப்புக் குழுவினர், 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படுகிறது.
தேர்தல் நடைமுறைகளால், ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைந்துள்ள ஜவுளிச் சந்தை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சந்தையானது திங்கள் கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க் கிழமை வரை நடைபெறும். வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்வர்.
சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரையிலும், விசேஷ நாட்களில் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, கடந்த ஒரு மாதமாக வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறுகையில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. வியாபாரிகள் வருகை குறைந்ததால், கடந்த ஒரு மாதமாக ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் குடோனில் தேங்கியுள்ளன. அரசியல் கட்சியினரின் கரை வேட்டி, சேலை, துண்டு போன்றவை மட்டும் விற்பனையாகி வருகின்றன’ என்றனர்.