

பிஎஸ் 3 வாகனங்களுக்கு விதிக்கப் பட்ட தடையால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தடை விதித்த மூன்று நாட்களுக்குள் வழங்கிய சலுகைகளால் இந்த இழப்பு ஏற்பட் டுள்ளது என ஐசிஆர்ஏ தர நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. நிறுவனங்கள் பாரத் 4 விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயாரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் இந்த தடையை விதித்தது. இதனால் பிஎஸ் 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நிறுவனங்களில் தேங்கினால் நஷ்டம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. இதற்காக நிறுவனங்கள் அதிகபட்ச சலுகைகளை வழங்கின.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் 4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்ய வேண்டும் என்றும் மார்ச் 29-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தொழில்நுட் பத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை விட சுற்றுச் சூழல் பாதிப்பு உள்ள தால் இதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவானது. இந்த நிலையில் மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிரடியாக பல சலுகைகளை அறிவித்தன. இப்படி அறிவிக்கப்பட்ட சலுகைகளின் மதிப்பு ரூ.600 கோடி என்றும், நிறுவனங்களின் அளவுக்கு ஏற்ப இந்த நஷ்டம் இருந்தது என்றும் ஐசிஆர்ஏ குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் சுப்ரதா ராய் கூறினார். இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 8 லட்சம் வாகனங்களில் சுமார் 6.71 லட்சம் வாகனங்கள் மோட்டார் சைக்கிள்களாகும். இதனால் டீலர்கள் மிக விரைவாக அதிக சலுகைகளை வழங்கி விற்பனை செய்தனர். இதனால் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களின் நான்காம் காலாண்டு வருமானத்தில் அதிக விற்பனை மற்றும் சலுகைகளும் இடம் பிடிக்கும் என்றார்.