

தமிழகத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதேபோல் மத்திய அரசும் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்திய அளவில் சுமார் 28,300 தனியார் மருத்துவமனைகள் மத்திய அரசு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான செலவில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், PHH, AAY (வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர்) என குறியீடு உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற குறியீடு உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற முடியாது. தமிழகத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறலாம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றுவோர் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தான் சிகிச்சை பெற முடியும். தமிழக அரசைப் போல் மத்திய அரசின் திட்டத்திலும் வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் உள்ள அனைவரும் பயன்பெறலாம் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன் கூறும்போது, “பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் 2001-ல் இந்திய அளவில் எடுக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பின்படி, பின்தங்கிய மக்கள் மட்டுமே பயன்பெற மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. பொருளாதார கணக்கெடுப்பு நடத்தி சுமார் 22 ஆண்டுகளாகிவிட்டது. அதன்பின் பல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வசதி வாய்ப்புகளில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் உள்ள குடும்பங்கள் சிகிச்சை பெற அனுமதியளிக்கிறது. அதுபோல், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திலும் அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.