Published : 19 Feb 2023 04:26 AM
Last Updated : 19 Feb 2023 04:26 AM
புதுடெல்லி: மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை மொத்தமாக ரூ.16,982 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்படுவதாக டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் 49-வது கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதில் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,201 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்படும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு, 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு அவ்வப்போது விடுவித்து வந்தது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை, மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49-வது கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை தாங்கி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மாநிலங்களுக்கு தற்போது (2022 ஜூன்) வரை வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை மொத்தமாக ரூ.16,982 கோடி வழங்கப்படும். இத்தொகை ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் உண்மையிலேயே இல்லை என்றாலும், மத்திய அரசு தனது சொந்தநிதியில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் வசூலிக்கப்படும் இழப்பீடு வரி வசூலிப்பில் இருந்துஇத்தொகையை பெற்றுக் கொள்வோம்.இத்தொகையுடன், ஜிஎஸ்டி சட்டத்தில்கூறப்பட்டதுபோல, 5 ஆண்டுகளுக்கான இழப்பீடும் வழங்கப்பட்டு விடும்.
மேலும், வெல்லப் பாகுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது. ஆனால், வெல்லம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டாலோ, லேபிள் ஒட்டப்பட்டாலோ 5 சதவீத வரி விதிக்கப்படும். கன்டெய்னர்கள் எங்கு செல்கின்றன என்பதை அறிவதற்காக பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகள், டேக்குகள், டேட்டா லாக்கர்களுக்கான 18 சதவீத வரியும் சில நிபந்தனைகளுடன் முற்றிலும் நீக்கப்படுகிறது. பென்சில் சீவும் சாதனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். இக்கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இதன் வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த 5 அல்லது 6 நாட்களில் அனுப்பி வைக்கப்படும். வழக்கமான ஜிஎஸ்டி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு விதிக்கப்படும் அபராதத்தை முறைப்படுத்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
மாநிலங்களுக்கு கடந்த 2022 ஜூன் வரை நிலுவையில் உள்ள மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.16,982 கோடியை வழங்க நேற்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.1,201 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT