நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி துறைகளில் ஆசிய வங்கி கவனம் செலுத்த வேண்டும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கோரிக்கை

நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி துறைகளில் ஆசிய வங்கி கவனம் செலுத்த வேண்டும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கோரிக்கை
Updated on
1 min read

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வறுமையை அகற்றுவதை நோக்கமாக கொண்டு ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) செயல்பட்டு வருகிறது. இதனுடன் நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஆசிய வளர்ச்சி வங்கி கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். முக்கியமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் யோகஹோமா நகரில் நடைபெற்ற ஆசிய வளர்ச்சி வங்கியின் 50-வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருண் ஜேட்லி பேசியதாவது: தெற்காசியாவுக்கான பிராந்திய மையத்தை புதுடெல்லியில் அமைக்க வேண்டும். புதுடெல்லியில் பிராந்திய மையத்தை அமைக்கும் பட்சத்தில் பல்வேறு முன்மொழிவுகள் விரைவாக செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் பரிந்துரை மீதான செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. முன்மொழிவுக்கான ஒப்புதலும் கடன் கிடைப்பதற்கும் இடையிலான கால இடைவெளி அதிகமாக இருக்கிறது.

இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். இந்த இடைவெளியை குறைப்பதற்கும் பரிந்துரைகள் மீதான செயல்பாடுகளை வேகப் படுத்தவும் பிராந்திய மையத்தை புதுடெல்லியில் அமைக்க வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வலியுறுத்துகிறேன். தெற்கு ஆசியாவுக்கான பிராந்திய மையத்தை புதுடெல்லியில் அமைப்பதன் மூலம் பெரும்பா லான பரிந்துரைகள் மீதான செயல் பாடுகள் வேகமாக நடைபெறும். மற்ற பிராந்தியங்களிலும் மையத்தை அமைக்க வேண்டும். ஏனெனில் தெற்காசியாவில் பல் வேறு நாடுகள் சமூக ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் நல்ல முறையில் இயங்கி வருகின்றன.

நகர்ப்புற மேம்பாட்டை பொறுத்தவரை குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகியவை மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த சவால்களை களைவதற்கும் குடி நீர் மற்றும் சுகாதாரம் ஆகிய வற்றை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி கவனம் செலுத்த வேண்டும்.

வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பருவநிலை சார்ந்த வேளாண்மை, சிறந்த வேளாண்மை உற்பத்தி, உற்பத்தி தொழில்முறைகள் ஆகியவற்றில் ஆசிய வளர்ச்சி வங்கி கவனம் செலுத்த வேண்டும். இவை மட்டுமல்லாமல் கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in