

சென்னை: 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு 7,614 கோடி ரூபாய் ஆகும்.
இதில் ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) நிறுவனம் 5,114 கோடி ரூபாயும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற்பூங்காவில் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் 1.40 லட்சம் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.