

புதுடெல்லி: அங்கீகாரம் பெறாத சில நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட தலைப்புகளைப் போலவே இருக்கும் (சிறிய மாற்றத்துடன்) தலைப்புகளில் விளம்பர குறுந்தகவலை அனுப்புவது தெரியவந்துள்ளது. மேலும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் இருந்து விளம்பர குறுந்தகவல்களை அனுப்புவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அங்கீகாரம் பெறாத நிறுவனங்களோ அல்லது அதன் ஊழியர்களோ பொதுமக்களின் செல்போன்களுக்கு விளம்பர குறுந்தகவல் அனுப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளைத் தவிர போலியான தலைப்புகளில் விளம்பரங்கள் அனுப்பப்படுவதை 30 நாட்களுக்குள் தடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, தற்காலிக தலைப்புகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செயலிழக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.