Published : 17 Feb 2023 05:58 AM
Last Updated : 17 Feb 2023 05:58 AM
புதுடெல்லி: சிறப்பு உருக்கு தயாரிப்புக்காக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உருக்கு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று தொடங்கிய சர்வதேச துத்தநாக மாநாட்டில் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார். அப்போது அவர், “இந்தியாவில் சிறப்பு உருக்கு தயாரிப்புக்கென்று ஊக்கத்தொகை திட்டத்தைக் கொண்டிருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ் தயாரிப்பு மேற்கொள்ள 54 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அந்நிறுவனங்கள் சிறப்பு உருக்கு தயாரிப்பு சார்ந்து ரூ.30,000 கோடி முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் 25,000 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
துத்தநாக தயாரிப்பில் இந்தியா உலகின் நான்காவது பெரிய நாடாகஉள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் கட்டமைப்பில் துத்தநாக தேவை அதிகமாக உள்ளது. அந்தவகையில் தற்போது துத்தநாகத்துக்கான சந்தை அதிகரித்துள்ளது. இதனால் துத்தநாகம் கலந்த சிறப்பு உருக்கு தயாரிப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் நிறைய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் சிறப்பு உருக்கு தயாரிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சகம் 2021 ஜூலை மாதம்இத்துறை தொடர்பாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ரூ.6,332 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT