

சென்னை: ஐ.டி துறையை சார்ந்த ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பணி இழப்பு நடவடிக்கைக்கு ஆளாகலாம் என Naukri.com சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் எனவும் இந்த சர்வேயில் தகவல்.
சுமார் 1400 ரெக்ரூட்டர்ஸ் மற்றும் பத்து துறைகளை சார்ந்த கன்சல்டன்ட்ஸ் இடையே இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் பலர் தங்கள் நிறுவனத்தில் 4 சதவீத ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைக்கு நடப்பு ஆண்டின் முதல் பாதியில் ஆளாகலாம் என தெரிவித்துள்ளதாகவும் தகவல். அது தங்கள் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஐடி துறையை சார்ந்தவர்களாகவே உள்ளனர். பிஸினஸ் டெவலெப்மென்ட், மார்க்கெட்டிங், மனிதவளம் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவர்களும் இதில் பாதிக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது என்ற நம்பிக்கைத் தகவலும் கிட்டியுள்ளது.
இந்த பாதிப்பு 2023-ன் முதல் பாதியில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்திய ஊழியர்கள் கணிசமான ஊதிய உயர்வை பெறுவார்கள் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளாக அளவிலான ஆட்சேர்ப்பு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பதாகவும் இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கல்லூரிகளில் பட்டம் முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.