

வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டம் இல்லை, இருந்தாலும் நான்கு கோடி பிஎப் சந்தாதாரர்களுக்கு வீடு வாங்குவதற்கு உதவி செய்யும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கட்டுமானம் குறித்து பிஎப் அமைப்பு செய்வதற்கு ஏதும் இல்லை. அது சந்தாதாரர்களின் பொறுப்பு. ஆனால் அடுத்த இரு ஆண்டுகளில் குறைந்த பட்சம் 10 லட்சம் சந்தாதாரர்களுக்கு உதவ திட்டமிட்டிருக்கிறோம். அவர்களின் பிஎப் தொகையில் இருந்து 90 சதவீதத்தை எடுத்து வீடு வாங்குவதற்கு முன்பணம் வழங்க அனுமதிக்க இருக்கிறோம்.
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்னும் பிரதமரின் இலக்கை எட்டுவதற்கு ஏற்ப இந்த திட்டம் செயல்படும். மாதம் 15,000 ரூபாய்க்கு கீழ் அடிப்படை சம்பளம் வாங்குபவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறினார்.
முன்னதாக, பிஎப் அமைப்பு 10 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டிருகிறது என ஊடகங்களில் தவறான செய்தி வெளியானதை அடுத்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.