

மும்பை: ஹிண்டன்பர்க் அறிக்கையினை அடுத்து அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகளின் விலை பாதிக்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த ஒரு வாரமாக வீழ்ச்சி தொடரும் நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் உலக தர வரிசையில் 5-வது இடத்திலிருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 6-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் 5-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டது.
இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வர்த்தகம் இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு சாதகமாக இருந்த நிலையில், சந்தை மூலதனம் 3.15 லட்சம் கோடி டாலரைத் தொட்டது. இதையடுத்து, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி இந்திய பங்குச் சந்தை மீண்டும் 5-வது இடத்தை தக்கவைத்தது. பிரான்ஸ் 6 வது இடத்துக்குச் சென்றது.
நிறுவனங்களின் செயல்பாடுகள் 4-வது காலாண்டில் சிறப்பாக இருக்கும் என்ற மதிப்பீடு காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது.
இருப்பினும், கடந்த ஜனவரி 24-ம் தேதியுடன் ஒப்பிடுகையில் இந்திய சந்தையின் மொத்த சந்தை மூலதனமதிப்பு இன்னும் 6 சதவீதம் குறைவாகவே உள்ளது.