

நிறுவனங்கள் கைமாறும் போது அதிகம் பாதிக்கப்படுவது பணி யாளர்களாக இருக்கும். ஆனால் ஸ்நாப்டீல் விஷயத்தில் பணி யாளர்களுக்கு ரூ.193 கோடி கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது. பிளிப்கார்டுடன் ஸ்நாப்டீல் இணையும் பட்சத்தில் ஸ்நாப்டீல் நிறுவனர்களுக்கு 6 கோடி டாலர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் பாதியை பணியாளர்களுக்கு வழங்கப்போவதாக ஸ்நாப்டீல் நிறுவனர்கள் இயக்குநர் குழுவிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
நிறுவனங்கள் இணைப்பினால் பணியாளர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக நிறுவனர்கள் இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. தற்போது 1500 முதல் 2000 பணியாளர்கள் ஸ்நாப்டீலில் பணிபுரிகின்றனர்.
கடந்த 12 மாதங்களில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய மூத்த அதிகாரிகளுக்கும் இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் ஸ்நாப்டீல் நிறுவனம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் 30 சதவீதத்துக்கும் மேல் பங்குகளை வைத்திருக்கிறது. ஸ்நாப்டீலை பிளிப்கார்டுக்கு விற்பதற்கு நிறுவனர்கள், இயக்குநர் குழு, முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரின் அனுமதியையும் சாப்ட்பேங்க் பெற்றுவிட்டது.
இன்னும் ஒரு சில வாரங் களில் நிறுவன இணைப்பு குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.