

மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வட்டி விகிதத்தை உயர்த்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் 6 பேரில் 4 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, பெரும்பான்மையின் அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஏதுவாக, ரெப்போ வட்டி விகித்தை மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய மதிப்பீடான 6.8 சதவீதத்தை காட்டிலும் 0.20 சதவீதம் அதிகம். இந்த வளர்ச்சி விகிதம் வரும் 2023-24-ம் நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வங்கித் துறை வலிமையானதாகவும், நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. எனவே, (அதானி) சில விவகாரங்களால் இந்திய வங்கி அமைப்பில் பாதிப்பு ஏற்படாது. வங்கி ஒரு நிறுவனத்துக்கு கடன் வழங்கும்போது அதனுடைய அடிப்படை மற்றும் திட்டங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் ஆதாயம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொள்கிறது. இதில், அந்நிறுவனத்தின் சந்தை மூலதனத்திற்கு எந்தப் பங்கும் கிடையாது. கடந்த 3-4 ஆண்டுகளில் நிர்வாகம், தணிக்கை மற்றும் இடர்மேலாண்மை குழுக்களுக்கு வழிகாட்டுதல் உட்பட வங்கிகளின் திறனை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கியானது தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளது.
ஜி-20 நாடுகளுக்கு யுபிஐ..: ஜி-20 நாடுகளின் பார்வையாளர்கள் இந்தியாவிற்கு வரும் போது அவர்கள் உள்நாட்டுக்குள் ஷாப்பிங் செய்ய யுபிஐ மூலம் பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த வசதி குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான யுபிஐ நடைமுறையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் யுபிஐ மூலமான பரிவர்த்தனை அதிகபட்சமாக ரூ.12.82 லட்சம் கோடியைத் தொட்டது. பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் சர்வதேச மொபைல் எண் களைப் பயன்படுத்தி யுபிஐ பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வங்கித் துறை வலிமையானதாக, நெகிழ்வுத் தன்மை கொண்டதாக விளங்குகிறது.