

தொழில்துறை உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. உற்பத்தித்துறையில் நிலவும் தேக்க நிலை காரணமாக மைனஸ் 1.9 சதவீதமாக சரிந்தது.
தொழிற்சாலையிலிருந்து உற்பத்தியாகும் பொருள்களின் அடிப்படை ஐஐபி கணக்கிடப்படுகிறது. கடந்த 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) ஒட்டுமொத்தமாக தொழில்துறை 0.1 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் தொழில்துறை 0.9 சதவீத அளவுக்கு வளர்ச்சியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி திருத்தப்பட்ட மதிப்பீடு 0.8 சதவீதமாகும். ஆனால் முந்தைய மதிப்பீடு 0.1 சதவீதமாக இருந்தது. மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்ட அட்டவணையில் 2013 பிப்ரவரியில் ஐஐபி 0.6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே தொழிற்சாலை உற்பத்தி மைனஸ் 1.2 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தது. இந்த நிலை டிசம்பர் வரை நீடித்தது. தொழில்துறை அட்டவணையில் உற்பத்தித்துறையின் பங்களிப்பு 75 சதவீதமாகும். ஒட்டுமொத்தமாக 22 துறைகளில் 13 துறைகள் சரிவையே சந்தித்துள்ளன.