

நியூயார்க்: கம்ப்யூட்டர் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து 6,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டெல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் அதிக அளவிலான பணிநீக்க நடவடிக்கைகள் அண்மைக்காலமாக தொடர் கதையாகி வருகின்றன. கூகுள் போன்ற பெரும்பலம் வாய்ந்த நிறுவனங்கள் கூட செலவுகளை குறைக்க பணியாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து வருகின்றன. அந்த வரிசையில் டெல் நிறுவனமும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளது.
இதுகுறித்து டெல் நிறுவனத்தின் இணை தலைமை இயக்க அதிகாரி ஜெப் கிளார்க் தெரிவித்துள்ளதாவது:
தனிநபர் கம்ப்யூட்டர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. இதனால், நிறுவனத்தின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற சந்தை சூழல், அதிகரித்து வரும் நிதிச் சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, டெல் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களில் 5 சதவீதம் ஆகும்.
இவ்வாறு கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஐடிசி நிறுவனத்தின் ஆய்வின்படி 2022-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் டெல் நிறுவனத்தின் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல் நிறுவனம் அதன்மொத்த வருவாயில் 55 சதவீதத்தை கம்ப்யூட்டர் விற்பனையின் மூலமாக ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.