Published : 07 Feb 2023 06:21 AM
Last Updated : 07 Feb 2023 06:21 AM
பெங்களூரு: எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் கண்டறிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் நரேந்திர மோடி பெங்களுருவில் நேற்று தொடங்கி வைத்தார். இதில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, சர்வதேச எரிபொருள் நிறுவன உரிமையாளர்கள், 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். சர்வதேச எண்ணெய் நிறுவன உரிமையாளர்களுடன் புதுப்பிக்கத்தக்க பசுமை எரிபொருளின் தேவை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பிரதமர் மோடி, 20% எத்தனால் கலந்த (E20) பெட்ரோலையும் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இரட்டை குக்கரையும் அறிமுகப்படுத்தினார். மேலும் பசுமை எரிபொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பசுமை இயக்க பேரணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்திய எரிசக்தி வார தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா எரிசக்தி வாரம் என்பது ஜி20-ன் முதல் முக்கிய நிகழ்வாகும். E20 என பெயரிடப்பட்டுள்ள இந்த 20% எத்தனால் கலந்த பெட்ரோல் வருகையால் எரிபொருளின் விலைவாசி வெகுவாக குறையும். காற்று மாசுபடுவதும் குறைந்து, வாகன தேய்மானமும் கட்டுக்குள் வரும். E20 பெட்ரோல் நாட்டில் 15 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இதேபோல சோலார் இரட்டைகுக்கர் அடுத்த மூன்று ஆண்டுகளில், 3 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதன் வருகையால் இந்திய சமையலில் புதிய மாற்றங்கள் உருவாகும்.
இந்தியா செல்போன் உற்பத்தியில் உலகின் 2-வது பெரியநாடாகவும், கச்சா எண்ணெய்சுத்திகரிப்பில் 4-வது பெரிய நாடாகவும் உள்ளது. எரிசக்தி துறையிலும் இந்தியா முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது.
நாட்டில் எரிசக்திக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவை 5 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக அதிகரிக்கும். எனவே முதலீட்டாளர்கள் எரிசக்திதுறையில் புதிய வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். புதிய வாய்ப்புகளுக்கு இந்தியா பொருத்தமான இடமாக விளங்குகிறது. இந்தத் துறையில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.
2023-24 பட்ஜெட்டில் பசுமைஎரிசக்தி உற்பத்தியின் மூலதனச் செலவினங்களுக்காக ரூ.10 லட்சம்கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு ரூ. 35,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி அலகுகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதையடுத்து தும்கூர் சென்ற மோடி அங்கு எச்.ஏ.எல். நிறுவனம் உருவாக்கியுள்ள ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்துவைத்தார். அந்த தொழிற்சாலைக்கு கடந்த 2016-ம் ஆண்டு மோடிஅடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT